-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி
உள்ளடக்கம்:
இதிலுள்ள கருத்து வேறுபாடுகள்:-
முழுமையாக தடவ வேண்டும் என்று கூறுவோரின் ஆதாரங்கள்.
சில பகுதியை தடவினால் போதும் என்று கூறுவோரின் ஆதாரங்களும், இவர்களது கூற்றுக்கான மறுப்பும்.
சரியான நிலைப்பாடு என்ன?
இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. தொழுகை சீராக வேண்டுமேயானால் வுளு ஏற்றுக் கொள்ளப்பட்ட பூரணமானதாக இருக்க வேண்டும்.
அந்தடிப்படையில் வுளுவை நிறைவேற்றுகின்ற போது இடம் பெறுகின்ற தவறுகளில் பிரதானமானதுதான் தலையை மஸ்ஹ் செய்கின்ற விடயமாகும்.
பொதுவாக முஸ்லிம்கள் அனைவரும் வுளுவின் போது தலையை மஸ்ஹ் செய்வதை
விசுவாசங்கொண்டோரே நீங்கள் தொழுகைக்காக தயாரானால் உங்களுடைய முகங்களையும் முழங்கை வரையில் உங்களது இரு கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலைகளையும் தடவிக் கொள்ளுங்கள். உங்கள் கரண்டைக்கால் வரை உங்களது கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்” (05:06)
என்ற திருமறை வசனத்துக்கிணங்க தலைக்கு மஸ்ஹ் செய்வதை கடமை என்ற அடிப்படையில் பார்க்கின்றனர்.
ஒரு கருத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் எப்படி மஸ்ஹ் செய்ய வேண்டும் என்ற விடயத்தில் கருத்து வேறுபாடு கொள்கின்றனர்.
▪மாலிகி, ஹன்பலி மத்ஹபைப் பின்பற்றுவோர் தலைமுழுவதையும் மஸ்ஹ் செய்வதை கடமை என்று சொல்கின்றனர்.
▪ஹனபி, ஷாபிஈ மத்ஹபை பின்பற்றக்கூடிய சாரார் தலையின் சிறு பகுதியை மஸ்ஹ் செய்வது போதுமானது
என்று வாதிடுகின்றனர்.
இதில் முதலாவது சாராரான தலை முழுவதையுமே மஸ்ஹ் செய்ய வேண்டும் என்று கூறக்கூடியோர் காட்டக்கூடிய ஆதாரங்கள்:-
முதலாவது ஆதாரம்:
அல்லாஹ் கூறுகிறான்
“உங்களது தலைகளைக் தடவிக் கொள்ளுங்கள்”(05:06)
இந்த வசனம் தலை முழுவதையுமே மஸ்ஹ் செய்ய வேண்டுமென்று குறிப்பிடுகின்றது.
மேற்கூறிய அந்த வசனத்தை தயம்முடன் தொடர்புபட்டு வருகின்ற வசனத்துடன் ஒப்பு நோக்கி ஆராய்கின்ற போது
அல்லாஹ் தயம்முமைக் குறிப்பிடுகின்ற போது
“நீங்கள் சுத்தமான மண்ணால் உங்களது முகங்களையும் கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்” (5:6)
என்று கூறியிருக்கிறான். இந்த வசனத்தை வைத்து நாம் தயம்மும் செய்கின்ற போது முகத்தின் சிறு பகுதியை தடவாமல் முழுமையாக தடவிக் கொள்வோம். அதே போன்றுதான் அல்லாஹ் வுளுவினுடைய சட்டத்தின் போது தலையை மஸ்ஹ் செய்யுங்கள் என்று கூறியதற்கு முழுமையாக தடவுவதே சரியான நிலைப்பாடாகும்.
(மஜ்மூஃல் பதாவா-21/125)
இமாம் இப்னு அப்துல் பர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்
“தலையின் சிறு பகுதியை மஸ்ஹ் செய்வது போதுமானது என்று சொல்லக்கூடிய அறிஞர்கள் அவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்கள். இமாம் மாலிக் ரஹிமகுல்லாஹ் கூறினார்கள் : தலையை மஸ்ஹ் செய்வதில் கடமை எதுவெனில் முழுமையாக மஸ்ஹ் செய்வதாகும். அதில் ஏதாவது ஒரு பகுதி விடுபட்டாலும் அவன் முகத்தைக் கழுவுவதில் ஒரு பகுதியை விட்டவன் போலாகும். இதுதான் மாலிக் மத்ஹபினரிடத்திலிருந்து அறியப்பட்ட ஒன்றாகும். இந்தக் கருத்தில்தான் இமாம் இப்னு அலிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இருக்கிறார்கள். இமாம் இப்னு அலிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் தயம்முமுடைய நேரத்தில் முகத்தை தடவுமாறும் வுளுவின் போது முகத்தைக் கழுவுங்கள் என்று ஏவியது போல் வுளுவின் போது தலையை மஸ்ஹ் செய்யுமாறும் ஏவியிருக்கிறான். அறிஞர்கள் ஒன்று சேர்ந்து வுளுவின் போது முகத்தில் சிறு பகுதியைக் கழுவுவதையும் தயம்முமடைய நேரத்தில் முகத்தின் சிறு பகுதியை தடவுவதையும் கூடாது என்று சொல்கின்றனர். அதே போன்று தான் வுளுவுடைய நேரத்தில் தலையை மஸ்ஹ் செய்வதுமாகும்.
(அத் தம்ஹீத்:20/114)
இரண்டாவது ஆதாரம்:-
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலையின் சிறு பகுதியைதான் மஸ்ஹ் செய்ய வேண்டும் என்று சுருக்கியதாக எந்த செய்தியும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இரண்டாவது சாராரான தலையின் சிறு பகுதியை மஸ்ஹ் செய்வது போதுமானது என்று கூறக்கூடியவர்கள் காட்டக்கூடிய ஆதாரங்கள்:
முதலாவது ஆதாரம்
அல்லாஹ் கூறுகிறான்
“நீங்கள் உங்களது தலைகளைத் தடவிக் கொள்ளுங்கள் -وامسحوا برؤوسكم-
இந்த வசனத்துக்கு அவர்கள் விளக்கம் கூறுகின்ற போது,
இந்த வசனத்தில் வருகின்ற பா(ب ) என்ற சொல் சில என்ற பொருளைக் கொடுப்பதற்கு பயன்படுத்துவதாகும். அவ்வாறு அந்த இடத்தில் சில என்ற சொல்லைப் பயன்படுத்தினால் “உங்களது தலையின் சிறு பகுதியை மஸ்ஹ் செய்து கொள்ளுங்கள்” என்றுதான் பொருள் வரும் என தெளிவுபடுத்துகிறார்கள்.
மறுப்பு:
மேற்கூறப்பட்ட இவ்விளக்கத்துக்கு உலமாக்கள் மறுப்பு சொல்லுகின்ற போது, இந்த இடத்தில் வருகின்ற பா (ب ) சில என்ற பொருளைத் தரமாட்டாது. மாற்றமாக சேர்த்தல் என்பதுதான் அதனுடைய பொருளாகும். அதாவது மஸ்ஹ் செய்கின்ற நீரினை தலையில் சேர்ப்பதாகும்.
(மஜ்மூஃல் பதாவா: 21/123)
இரண்டாவது ஆதாரம்
முகீரத் இப்னு ஷுஃபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் தலையின் மீதும் தலைப்பாகை மீதும் மஸ்ஹ் செய்தார்கள்”
(முஸ்லிம் 463)
இந்த நபி மொழியை வைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலையின் முன்பகுதியில் மஸ்ஹ் செய்திருக்கிறார்கள் என விளக்கம் சொல்கின்றனர்.
மறுப்பு
இதற்கு மறுப்பு சொல்லக்கூடிய பல அறிஞர்கள் பின்வருமாறு இதனைத் தெளிவுபடுத்துகிறார்கள்.
மேற்கூறப்பட்ட இந்த நபிமொழியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலையின் முன்பகுதியில் மஸ்ஹ் செய்ததுடன் நின்று விடாது அதனை தலைப்பாகையின் மீதும் மஸ்ஹ் செய்ததன் மூலமாக அதனைப் பூரணப்படுத்தியிருக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலைப் பாகையின் மீது மஸ்ஹ் செய்ததானது தலையை மஸ்ஹ் செய்தல் என்ற இடத்தில் இருந்து கொண்டிருக்கின்றது.
இமாம் இப்னுல் கையூம் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள்
“பொதுவாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலையின் சிறு பகுதியை மஸ்ஹ் செய்வது கொண்டு சுருக்கினார்கள் என்று ஒரு செய்தி கூட கிடையாது. என்றாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலையின் முன்பகுதியில் மஸ்ஹ் செய்து அதனை தலைப் பாகையின் மீது பூரணப்படுத்தினார்கள்.
(ஸாதுல் மஆத்-1/193)
இமாம் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்
“தலையின் முன்பகுதியில் மஸ்ஹ் செய்தார்கள் என்று இங்கே வருவதானது நிச்சயமாக நபியவர்கள் முன்பகுதியுடன் சேர்த்து தலைப்பாகை மீதும் மஸ்ஹ் செய்திருக்கிறார்கள். மாற்றமாக இந்த செய்தி தலையின் முன்பகுதியில் மாத்திரம் மஸ்ஹ் செய்வது ஆகுமானது என்பதை அறிவிக்கவில்லை.
(ஷரஹுல் மும்திஃ-1/178)
இந்த செய்திகளையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது இந்த இரண்டு கருத்துகளிலும் சரியான கருத்தாக முதலாவது சாராரின் வாதமான தலை முழுவதையும் மஸ்ஹ் செய்வது வாஜிபாகும் என்பதே சரியான கருத்தாகும்.
பதாவா அல் லஜ்னதீத் தாயிமாவில் வரக்கூடிய செய்திதான்
“வுளுவின் போது தலை முழுவதையும் மஸ்ஹ் செய்வது வாஜிபாகும். அல்லாஹ் கூறுகிறான் “உங்களது தலைகளைத் தடவிக் கொள்ளுங்கள்”
அதே போன்று அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படக்கூடிய செய்தியை இமாம் புஹாரி முஸ்லிம் றஹிமஹுல்லாஹு அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலையை மஸ்ஹ் செய்கின்ற போது முன் நெற்றியில் ஆரம்பித்து பிடறி வரைக்கும் கொண்டு சென்று மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே கையினை கொண்டு வந்தார்கள்”
(பதாவா அல்லஜ்னதுத் தாயிமா-5/227)
மேலும் இமாம் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்
“ஒருவர் தலையின் மற்றைய பகுதிகளை விட்டு விட்டு முன்பகுதியை மாத்திரம் மஸ்ஹ் செய்தாரானால் நிச்சயமாக அதனை அல்லாஹ் சுருக்கவில்லை. அல்லாஹ் “தலையினை தடவுங்கள்” என்றே கூறினானே தவிர சில பகுதியைத் தடவுங்கள் என்று சொல்லவில்லை.
(அஷ் ஷரஹுல் மும்திஃ- 1/187)
இறுதியாக
அல்லாஹ்வும் அவனது தூதரும் எம்மை எப்படி வுளு செய்யுமாறு ஏவினார்களோ அவ்வாறே நாமும் வுளுவினை நிறைவேற்றி அதன் மூலமாக நன்மைகளைப் பெற்றுக் கொள்ள எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் அருள்புரிவானாக!.
-அல்லாஹ்வே நன்கறிந்தவன்-
தமிழில்
பர்ஹான் அஹமட் ஸலபி