ரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்?
ஆசிரியர் : மௌலவி அஸ்ஹர் ஸீலானி
1) பிரார்த்தனை: நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ரமழான் மாதத்தை அடைந்து அதிகம் அதிகம் நற்கருமங்கள் செய்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்ற அடியானாக மாறுவதற்கு அவனிடம் உறுதியான உள்ளத்துடன் பிரார்த்தியுங்கள்.
2) தூய உள்ளம்: எந்த அற்ப உலகியல் நோக்கமும் இன்றி இறை திருப்தி, மறுமை வெற்றி, இறையச்சத்தை அதிகப்படுத்தல் போன்ற தூய எண்ணங்களை மாத்திரம் நோக்காகக் கொண்டு ரமழானை வரவேற்கத் தயாராகுங்கள்.
3) மன உறுதி: எனது உடல், மன வலிமைகளை இயன்ற வரை பயன்படுத்தி எவைகளெல்லாம் நற்கருமங்களோ அவைகளில் முந்திச் சென்று அதிகமதிகம் வணக்க வழிபாடுகள் செய்து இறை திருப்தியை பெறுவேன் என உறுதி பூணுங்கள்.
4) பாவ மீட்சி: கடந்த காலத்தில் நிழக்ந்த அனைத்து பாவங்களுக்கும் உள முறுகி தூய உள்ளத்துடன், மன உறுதியுடன் அந்தப் பாவங்களை மறு படியும் எனது வாழ்வில் நான் எண்ணிக் கூட பார்க்க மாட்டேன் என்ற மன உறுதியுடன் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடி அவன் பால் மீண்டவராக, எந்தப் பாவமும் அற்ற தூய மனிதராக ரமழானுக்குத் தயாராகுங்கள்.
5)நேரத்தை நன்றாகத் திட்டமிடுங்கள்::
ரமழான் வேகமாக நகரும் சில நாட்கள், அதன் ஒவ்வொரு நொடியும் நிமிடமும் மிகவும் பெருமதியானவை. 30 நாடகள் என்றால் 720 மணி நேரம் இதை உரிய முறையில் திட்டமிடுங்கள். ஒரு நாளுடைய 24 மணி நேரத்தை சரியாக திட்டமிட்டு வகுத்துக் கொள்ளுங்கள். கடமையாக தொழுகைகளை கூட்டாக நிறைவேற்றுங்கள், இரவுத் தொழுகையில் கவனம் செலுத்துங்கள், பிந்திய இரவில் எழுந்து தொழுது பாவ மன்னிப்பு தேடுங்கள், இரவுத் தொழுகையில் அதிகம் குர்ஆனை ஓதுங்கள், ஸஹர் உணவை எடுத்து விட்டு பஃஜ்ரின் முன் சுன்னத், பாங்கிற்கும் இகாமத்திற்கும் மத்தியில் பிரார்த்தனை, அல்குர்ஆன் ஓதுதல், பஃஜ்ரை ஜமாஅத்துடன் தொழுதல், கடமையான தொழுகையின் பின் ஓத வேண்டிய திக்ருகள், பிரார்த்தனைகள், அல்குர்ஆன் ஓதுதல். காலை திக்ருகளை, பிரார்த்தனைகளை ஓதுதல், ழுஹாத் தொழுகையை தொழுதல், ஸதகாக்கள் செய்தல், நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல், உடல் உறுப்புக்களை பாவங்களை விட்டு பேணிக் கொள்ளல். குறிப்பாக நாவையும், கண்களையும், காதுகளையும் பேணல். ஆகக் குறைந்தது குர்ஆனை ஒரு முறையேனும் ஓதி முடித்தல். மார்க்க மஜ்லிஸ்களை தேடிச் செல்லல். இவ்வாறு ரமழானுடைய ஒவ்வொரு நாளின் நேரங்களையும் நன்றாகத் திட்டமிட்டு வகுத்துக் கொள்ளுங்கள்.
6) மனம் நிறைந்த மகிழ்ச்சி:
ஒரு முஃமினின் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் இவைகள். சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்ற, நரகின் வாயில்கள் மூடப்படுகின்ற, ஷைத்தான்கள் விளங்கிடப்படுகின்ற, நரகத்திற்குரியவர்கள் ஒவ்வொரு இரவும் விடுதலை செய்யப்படுகின்ற, ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவுள்ள இப்படி அதிக பாக்கியங்கள் நிறைந்த சிறப்புமிகு ரமழானின் வருகை எப்படி ஒரு முஃமினுக்கு மகிழ்ச்சி தராமல் இருக்க முடியும்?
7) ரமழான் மற்றும் நோன்பு தொடர்பான சிறப்புகளை மார்க்க சட்ட திட்டங்களை அறிந்து கொள்ளுங்கள்:
ரமழான் மற்றும் நோன்பின் சிறப்புகள், மார்க்க சட்டதிட்டங்கள் தொடர்பாக மார்க்க ஆதாரங்களுடன் எழுதப்பட்ட ஆக்கங்களை, நூற்களை வாசிப்பது, ஆதாரங்களுடன் கூடிய உரைகளை செவிமடுப்பது, அப்படியான சிறப்பு நிகழச்சிகளில் பங்கெடுப்பது. முன் சென்ற நல்லோரின் வாழ்வில் ரமழான் எப்படி இருந்தது என்ற ஆக்கங்களை அதிகம் படித்து அந்த முன்மாதிரிகளை நமது வாழக்கைக்கு எடுத்துக் கொள்வது. இன்னும் குடும்ப உறவுகளுக்கும், மனைவி, மக்களுக்கும் அவைகளை வாசிப்பதற்கு கேட்பதற்குள்ள வசதிகளை செய்து கொடுப்பது.
8) ரமழானுக்கு முன் உலகியல் தேவைகளை முடித்துக் கொள்ளுங்கள்:
இயன்ற வரை ரமழானுக்கு முன்னரே உலகியல் தேவைகளை முடித்துக் கொள்வது, ரமழானுக்குப் பின்னர் வரையில் தள்ளிப் போட முடியமானவைகளைத் தள்ளிப் போடுவது. ரமழான் மாதம் என்பது நற்கருமங்கள் புரிவதற்குள்ள பொற்காளம் என்பதை மறந்து விடாமல் செயல் படுவது. உலகியல் தேவைகள், வகை வகையான உணவுகள் என்று பெறுமதியான நேரங்களை வீணடித்து விடாமல் புத்தியுடன் சிந்தித்து செயல் படுங்கள்.