தோற்றமும்,வளர்ச்சியும்:
ஷீஆக்கள் எப்போது தோற்றம் பெற்றார்கள் என்பதில் மூன்று விதமான கருத்துக்கள் உள்ளன..
- நபி(ஸல்) அவர்களுக்கு முன்பிருந்தே ஷீஆக்கள் இருக்கிறார்கள், இது தவறான கருத்து என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.
- நபி (ஸல்) அவர்களின் வருகையுடன் ஷீஆக்களின் தோற்றமும் ஆரம்பிக்கிறது, இதுவும் தவறான கருத்தாகும். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டார்களே தவிர ஆபாசங்களும், அசிங்கங்களும் நிறைந்த ஷீஆ மதத்தை அல்ல.
இந்த இரண்டு கருத்துக்களும் வரலாற்று அடிப்படையில் மற்றவர்களிடம் நற்பெயரை வளர்ப்பதற்காக ஷீஆக்கள் உருவாக்கிக் கொண்ட கருத்துகளாகும்.
- அலி (ரலி) மற்றும் முஆவியா (ரலி) இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிளவின் போது இப்பெயர் தோற்றம் பெற்றது. இது ஒரு சாராரில் இருந்து மற்ற சாராரை இனங்காட்டுவதற்கான ஒரு அடையாளமாகவே இருந்தது. கொள்கை, சிந்தனை, வணக்க வழிபாடுகளில் எந்த வித்தியாசமும் அவர்களிடம் இருக்கவில்லை. எல்லோரும் மற்றச் சாராரை சகோதரர்களாகவே கருதினர். சகோதரத்துவ வாஞ்சையுடன் தங்கள் தொடர்புகளை அமைத்துக் கொண்டனர், உஸ்மான் (ரலி) அவர்களைக் கொலை செய்த கும்பலுக்கு உடனுக்குடன் பழி தீர்ப்பதா? இல்லையா?? என்பதில்தான் கருத்து முரண்பாடு கண்டார்கள். மற்ற மார்க்க ரீதியான எந்த விடயங்களிலும் அவர்களிடம் கருத்து முரண்பாடு இருக்கவில்லை என்பது முக்கியமான ஒரு விடயமாகும்.
இதனால்தான், பிற்பட்ட காலத்தில் அவர்கள் பிரச்சினையை மறந்தார்கள். ஒருவருக்கொருவர் மற்ற தரப்பாருடன் திருமணம் செய்துகொண்டனர், ஒரு சாரார் மற்றவர்களை காஃபிர்கள் என்று நினைத்திருந்தால் இவ்வாறு திருமணம் செய்வது சாத்தியமாகி இருக்காது.
அதுபோலவே அலி(ரலி) அவர்களின் மரணத்தின் பின்பு முஆவியா(ரலி) அவர்களின் ஆட்சியில் உமைய்யாக்களின் தலைமையின் கீழ் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஓரணியாகினர். இவர்கள் அனைவருமாகச் சேர்ந்து இஸ்லாமிய உலகில் பல வெற்றிகளை கண்டனர். நிச்சயமாக கொள்கை அடிப்படையில் பிரிந்திருக்கும் இரு சாராரினால் இவ்வாறான வெற்றிகளை ஈட்டுவது கடினம்.
உமைய்யாக்களுக்கும், நபியவர்களின் குடும்பத்தினருக்கும் இடையில் நெருக்கமான ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. நபியவர்களின் குடும்பத்திற்கு அதிகம் நன்கொடை வழங்குபவர்களாக உமைய்யாக்கள் இருந்திருக்கிறார்கள். அதை ஏற்றுக் கொள்பவர்களாக “அஹ்லுல் பைத்தினர்” இருந்தனர். நிச்சயமாக பெரும் பிளவுள்ள இரு சாரார் இவ்வாறு நடந்து கொள்வது கடினமானது.
நபியவர்களின் குடும்பத்தினர் ஸஹாபாக்களைத் திட்டவில்லை மாறாக அவர்களை திட்டுபவர்களுக்குத் தண்டனை வழங்குபவர்களாக இருந்தார்கள். ஸஹாபாக்களின் பெயர்களைத் தங்கள் செல்லக் குழந்தைகளுக்கு சூட்டுவதில் மகிழ்ச்சிக் கண்டனர். அலி(ரலி) அவர்களுக்கு அபூபக்ர், உமர், உஸ்மான் என்ற பெயரில் குழந்தைகள் இருந்திருக்கின்றனர். அதுபோல் ஹஸன்(ரலி) அவர்களும் தனது பிள்ளைகளில் இருவருக்கு அபூபக்ர், உமர் என்று பெயர் சூட்ட ஹுஸைன்(ரலி) அவர்களும் தனது மக்களின் ஒருவருக்கு அபூபக்ர் என்று பெயர் வைத்திருந்தார்கள். இது நபியவர்களின் குடும்பத்தின் பாரம்பரியங்களில் ஒன்றாக பின்வந்தோரால் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. நிச்சயமாக நபியவர்களின் குடும்பத்தினர் ஸஹாபாக்களை நேசிக்காதிருந்தால் இவ்வாறு பெயர் வைத்திருக்க முடியாது.
தனியான சிந்தனைகளைக் கொண்ட பிரிவாக எப்படி மாற்றம் பெற்றது:
உஸ்மான்(ரலி) அவர்களைக் கொன்றவர்களைப் பழிதீர்ப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. பிறகு அது முடிவுற்று சுமூகமான நிலையில் பேணப்பட்ட இந்த உறவு முறை, பிற்பட்ட காலத்தில் எவ்வாறு தனியான கொள்கை, கோட்பாடுகளைக் கொண்ட பிரிவாகத் தோற்றம் பெற்றது என்பது முக்கியமான ஒரு விடயமாகும்.
யூதர்கள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள் ஆயுத ரீதியாக முஸ்லிம்களை எதிர்க்க முடியாது என்று கண்டபோது, சிந்தனை ரீதியாக முஸ்லிம்களை பலவீனப்படுத்தவும் குர்ஆன், ஸுன்னாவை விட்டும் அவர்களைத் தூரமாக்கவும் முனைந்தனர், அத்தகைய முயற்சிகள் ஆரம்ப காலத்திலிருந்தே எடுக்கப்பட்டன.
ஸஹாபாக்களின் காலத்தில் இவ்வாறானதொரு பிரிவு ஏற்பட்டபோது இஸ்லாத்தின் எதிரிகள் அதை நாசூக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கான நீண்டகாலத் திட்டங்களை வகுத்தனர். இதன்படி அலி(ரலி) மற்றும் முஆவியா(ரலி) இருவரின் தரப்பிலும் நுழைந்தனர். இரண்டு சாராரையும் மூட்டி விடுவதற்கும், பரஸ்பரம் மோசமான கருத்துக்களை உருவாக்கவும் முனைந்தனர்.
முஆவியா (ரலி) அவர்களின் தரப்பில் இருந்தவர்களிடம் இந்த எதிரிகளின் பிரச்சாரம் பெரிதாக எடுபடவில்லை. காரணம், அவர்கள் இஸ்லாத்தில் உறுதியுடையவர்களாகவும், தலைமைத்துவக் கட்டுப்பாடு மற்றும் வாக்குறுதியை நிறைவேற்றும் பண்பு போன்றவற்றைப் பெற்றவர்களாகவும் இருந்தனர்.
ஆனால், அலி (ரலி) அவர்களின் தரப்பில் நிலைமை இதற்கு முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. அலி (ரலி) அவர்கள் தனது ஆட்சியின் தலைமையகமாக “கூபாவை” தோ்வு செய்திருந்தார்கள், இஸ்லாமிய வரலாற்றில் “கூபா” வாசிகள் உறுதியான ஒரு கொள்கை உடையவர்களாக இருந்ததில்லை, தலைமைத்துவக் கட்டுப்பாட்டை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது, “கூபா” வாசி என்றால் அவன் வாக்குறுதியை நிறைவேற்றமாட்டான் என்பது பிரபல்யமான ஒரு விடயம், அலி(ரலி) அவர்களின் தரப்பில் ஷீஆக்களின் ஸ்தாபகராகக் கருதப்படும் “அப்துல்லாஹ் பின் ஸபா” இருந்தான், இதனால் அவனது அணி பலம் பொருந்தியதாக இருந்தது. எனவே, இவ்வாறான நிலையில் இருக்கும் ஒரு கூட்டத்தில் மாற்றுத் தரப்பார் நுழைந்து வேலை செய்வதும் அவர்களின் இலட்சியங்களை அடைந்து கொள்வதும் இலகுவான ஒரு விடயம். இதன் காரணமாக அலி(ரலி) அவர்களின் தரப்பில் இருந்தவர்களிடம் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் படிப்படியாக திட்டமிட்ட அடிப்படையில் பரப்பப்பட்டன. இதன் விளைவாக அந்த சிந்தனைகள் காலப்போக்கில் தனியொரு மதமாகப் பரிணமித்தது.
ஷீஆக்களின் ஸ்தாபகராக ஷீயா அறிஞர்கள், ஏனைய அறிஞர்களால் இனங்காட்டப்படுபவன். “அப்துல்லாஹ் பின் ஸபா” எனும் யூதனாவான். இவன் “யெமன்” பிரதேசத்தைச் சேர்ந்தவன். உஸ்மான்(ரலி) அவர்களின் காலத்தில் தன்னை ஒரு முஸ்லிமாக இனங்காட்டிக் கொண்டான். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சதிசெய்வதை தனது முழுப்பணியாகக் கொண்டிருந்தான். இவனே இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக அலி(ரலி) தான் எல்லோரை விடவும் சிறந்தவர்; அவரே ஆட்சிப்பதவிக்குத் தகுதியானவர்; மற்றவர்கள் எல்லோரும் அவருக்கு அநியாயம் செய்துவிட்டனர் என்ற கருத்தைச் சொன்னான், அலி(ரலி) அவர்கள் கடவுள் தன்மை பொருந்தியவர் என்று வாதிட்டான். மேலும் அவருக்கு முந்தைய கலீபாக்களை சபிப்பதையும், ஸஹாபாக்களுக்கு எதிரான விரோதத்தையும் பிரச்சாரம் செய்தான் என ஷீஆக்களின் முக்கிய அறிஞர்களில் ஒருவரான “கிஷ்ஷி” என்பவர் தனது “ரிஜால்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இதை அறிந்துகொண்ட அலி(ரலி) அவர்கள் அவனுக்கும் அவனைப் பின்பற்றியவர்களுக்கும் தண்டனை வழங்கினார்கள். இவ்வாறு ஸஹாபாக்களின் காலத்தில் ஆரம்பித்த இக்குழுவே இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்களுக்குள் உருவான முதல் பிரிவினையாகும்.
எனவே, அவனால் உருவாக்கப்பட்ட இந்த சிந்தனைகள் அவனது மரணத்தின் பின்பு ஏனைய இஸ்லாத்தின் எதிரிகளால் முன்னெடுக்கப்பட்டது. இஸ்லாத்திற்கு முரணான பல கொள்கைகளும் சிந்தனைகளும் “அஹ்லுல் பைத்தின்” பெயரில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதனால்தான் இமாம் ஜாபர் ஸாதிக் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:
நாம் “அஹ்லுல் பைத்தினர்”, எம் ஒவ்வொருவர் மீதும் பொய் சொல்லும் ஒருவர் இருந்து கொண்டே இருக்கிறார். அவர் எம்மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார், இதனால் நாம் சொல்லும் உண்மையான செய்திகள் மக்களிடம் வீழ்த்தப்படுகின்றன.(ரிஜாலுல் கிஷ்ஷி)
இவ்வாறு தோற்றம் பெற்ற ஆரம்பகால ஷிஆக்கள் “ஸபஇய்யா” என்ற பெயரால் அழைக்கப்படுகின்றனர். ஆனாலும், பல குழுக்களாகப் பிரிவதை தங்கள் வழமையாக்கிக் கொண்டனர். ஒவ்வொருவரும் தாங்கள் மதிப்பவர்களை இமாம் என்று வாதிட்டு பிரிந்தனர். ஒவ்வொரு இமாம் மரணித்த பின்பும் அடுத்த இமாமைத் தீர்மானிப்பதில் அவர்களுக்கு மத்தியில் முரண்பாடு தோன்றுவது வழமையாக இருந்தது. இவ்வாறு தோற்றம் பெறும் குழுக்கள் அடுத்த குழுவை கடுமையாக விமர்சிப்பவைகளாகவும் காஃபிர் என்று சொல்பவைகளாகவும் இருந்தன.
அல்லாஹ் சொல்கிறான்:
“நிச்சயமாக அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் அதிலே அதிகமான முரண்பாடுகளைக் கண்டிருப்பீர்கள்.”
(அல்குர்ஆன் 15:01)
இவ்வாறு பல குழுக்களாகப் பிரிந்த போதிலும் “அஹ்லுல் பைத்தைக்” கேடயமாகப் பயன்படுத்தி இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிப்பது என்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இதை நிறைவேற்றுவதற்கு அவர்கள் தயங்கவில்லை.
தற்போது ஈரானின் ஆட்சிக்குரிய மதமாக ஷீஆ காணப்படுவதுடன் ஸிரியா, ஈராக், ஆப்கானிஸ்தானின் ஆட்சியையும் அது கையகப்படுத்தியுள்ளது. பஹ்ரைனில் பெரும்பான்மையாக ஷீஆக்கள் வாழ்ந்து வருவதுடன், மத்திய கிழக்கின் எல்லா நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். பாகிஸ்தான், இந்தியா போன்ற ஏனைய நாடுகளிலும் தங்களின் இருப்பை ஸ்திரப்படுத்துவதற்கான அதிகார ரீதியான முயற்சிகளும், பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு எவ்வளவு பரவலாக்கம் மேற்கொள்ளப்பட்டாலும் இஸ்லாத்தை பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றிருக்கிறான்.
யார் சூழ்ச்சிகள் செய்தாலும் அவனது மார்க்கத்தை அவன் பாதுகாத்தே தீருவான்…
இன்ஷா அல்லாஹ் தொடரும்…