Home / Q&A / Q & A மார்க்கம் பற்றியவை / மனித வாழ்வில் இறையச்சமும் அதனுடைய முக்கியத்துவமும்…

மனித வாழ்வில் இறையச்சமும் அதனுடைய முக்கியத்துவமும்…

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி

உலக வாழ்வில் வாழுகின்ற போது ஒவ்வொரு மனிதர்களுக்கும் அல்லாஹ்வைப் பற்றிய அச்சமானது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் எப்போது இல்லாது போகின்றதோ அப்போதே பாவ காரியங்கள் தலைவிரித்தாடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும், மனித உரிமைகள் சர்வசாதாரணமாக மீறப்பட்டுவிடும். எனவே இறையச்சம் என்பது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது.

இறையச்சம் என்றால் என்ன?

இறையச்சம் என்றால் என்னவென்பது பற்றி ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு விதமான விளக்கங்களை வழங்கியிருப்பதைக் காணமுடிகின்றது. அந்தடிப்படையில்

▪இமாம் இப்னுல் கையூம் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள்

“தக்வாவின் யதார்த்தம் என்னவென்றால் அல்லாஹ்வுடைய ஏவல்கள், தடைகள் விடயத்தில் ஈமானுடனும் நன்மையை எதிர்பார்த்தும் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவது கொண்டு அமல் செய்வதாகும். மேலும் அல்லாஹ் ஏவியதை நம்பிக்கை கொண்டு அவனது வாக்குகளை உண்மைப்படுத்தி அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதும் அல்லாஹ் தடைசெய்தவைகளை நம்பிக்கை கொண்டு அவனது எச்சரிக்கைகளை அஞ்சி நடப்பதுமாகும்”.

▪மேலும் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இறையச்சம் என்றால் என்னவென்று கூறும் போது பின்வருமாறு கூறினார்கள்.

“அல்லாஹ்வைப் பயப்படக்கூடிய தக்வாதாரிகள் எப்படிப்பட்டவர்களென்றால் நேர்வழியில் உள்ளவை என்று எவைகளை அறிந்து வைத்திருக்கின்றார்களோ அவைகளை விடுவதன் மூலம் கிடைக்கும் அல்லாஹ்வின் தண்டனைகளிலிருந்து எச்சரிக்கையாக இருப்பதுடன் அல்லாஹ்வினால் கொண்டு வரப்பட்ட விடயங்களை உண்மைப்படுத்தி அல்லாஹ்வுடைய றஹ்மத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுமேயாகும்”

▪இமாம் தல்க் இப்னு ஹபீப் என்பவர் இதனைப் பற்றி கூறுகின்ற போது

“தக்வா என்பது அல்லாஹ்வுடைய கூலியை எதிர்பார்த்து அல்லாஹ்விடமிருந்து பிரகாசமாக வந்தவற்றிலிருந்து அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவது கொண்டு அமல் செய்வதும் அல்லாஹ்வுடைய தண்டனையைப் பயந்து அல்லாஹ்விடமிருந்து வந்திருப்பவற்றில் மாறு செய்வதை விட்டு விடுவதுமாகும்” என்று கூறியிருக்கிறார்கள்.

▪இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்” என்ற வசனத்துக்கு விளக்கம் சொல்லும் போது கீழ்வருமாறு கூறினார்கள்
“அல்லாஹ்வுக்கு மாறு செய்யாமல் அவனுக்கு கட்டுப்படுவதும், அல்லாஹ்வை மறந்து விடாமல் நினைவு கூர்ந்து கொண்டிருப்பதும் , அல்லாஹ்வுக்கு நன்றி மறக்காமல் நன்றி செலுத்திக் கொண்டிருப்பதுமாகும்”

இப்படி இன்னும் சில இமாம்களும் ஒவ்வொரு விதமான விளக்கங்களை கூறியிருக்கின்றார்கள். எது எவ்வாறாக இருந்தாலும் இவ்விளக்கங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்வது இறையச்சமென்றால் அல்லாஹ் ஏவிய விடயங்களில் அவனுக்குக் கட்டுப்படுவதும் அவன் விலக்கிய காரியங்களை விட்டும் தவிர்ந்து நடப்பதுமாகும்.

_இறையச்சத்தின் முக்கியத்துவங்கள்._

இறையச்சத்தின் முக்கியத்துவங்களாக கீழ் வரக்கூடிய விடயங்களை அடையாளப்படுத்தலாம்.

01) அல்லாஹ்வுத்தஆலா தக்வாவினைப் பற்றி முன் வாழ்ந்தவர்களுக்கும் பின்வரக்கூடியவர்களுக்கும் உபதேசம் செய்திருக்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான்
“உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்றே நாம் உபதேசித்தோம்”
(04:131)

02) தக்வாவினைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபதேசம் செய்திருக்கின்றார்கள்.

“நீங்கள் எங்கு இருக்கின்ற போதும் அல்லாஹ்வினைப் பயந்து கொள்ளுங்கள்”
(திர்மிதி)

03)ஒவ்வொரு நபிமார்களும் தக்வா பற்றி மக்களுக்கு உபதேசம் செய்திருக்கின்றார்கள்.

அல்லாஹ் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களது செய்தியைக் குறிப்பிடும் போது,
“நூஹின் சமூகத்தினர் தூதர்களைப் பொய்பித்தனர். அவர்களது சகோதரர் நூஹ் அவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடக்க வேண்டாமா? எனக்
கேட்டதை (எண்ணிப்
பாருங்கள்)
(26:105,106)

மேலும் ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களது செய்தியைப் பற்றிக் கூறும் போது,
“ஆது கூட்டத்தினர் தூதர்களை பொய்பித்தனர். அவர்களது சகோதரர் ஹூத் அல்லாஹ்வை அஞ்சி நடக்க வேண்டாமா? எனக் கேட்டதை(நீர் எண்ணிப் பார்ப்பீராக)
(26:123,124)
என்றெல்லாம் முன்னைய நபிமார்களது சம்பவங்களை அல்லாஹ் கூறிக்காட்டுகிறான்.

04) மனிதன் தயார்படுத்த வேண்டிய விடயங்களில் மிகச் சிறந்தது தக்வாவாகும்.

அல்லாஹ் கூறுகிறான்
“மேலும் தேவையானவற்றை தயார் செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக தயார் செய்பவற்றில் மிகச்
சிறந்தது தக்வாவேயாகும். சிந்தனையுடையோரே என்னை அஞ்சிக்
கொள்ளுங்கள்”
(02:197)

05) தக்வாதாரிகள் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவர்களாகவும் மக்களில் கண்ணியத்துக்குறியவர்களாகவும் இருக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்
“அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு யாதொரு பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்களாக இருப்பார்கள்.
(10:62,63)

06) அல்லாஹ் இறையச்சத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உதவியாளராக இருக்குமாறு கூறியிருக்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான்
“நன்மை செய்வதிலும் அல்லாஹ்வை அஞ்சி நடப்பதிலும் ஒருவருக்கொருவர் உதவியாளர்களாக இருங்கள். மேலும் பாவம் செய்வதிலும் வரம்பு மீறுவதிலும் ஒருவருக்கொருவர் உதவியாளராக இருக்காதீர்கள்”
(05:02)

எனவே இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தக்வாவினை உரிய முறையில் அறிந்து அதன்படி அமல் செய்ய அல்லாஹ் அருள்புரிவானாக…

Check Also

பிள்ளைகளுக்கு பெற்றோர் செய்யும் கடமைகள்

பிள்ளைகளுக்கு பெற்றோர் செய்யும் கடமைகள் அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) தேதி : 26 – 11 – 2020 …

Leave a Reply