بسم الله الرحمن الرحيم
-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி
நவீன காலத்தை பொருத்தமட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளில் பிரதானமானதுதான் தன்னுடைய பிள்ளைகளை எவ்வாறு ஸாலிஹான பிள்ளைகளாக உருவாக்குவதென்பதாகும். ஏனெனில் நவீன கால கண்டுபிடிப்புகளுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் இன்று முஸ்லிம் சமுதாயம் எவ்வித வயது வித்தியாசமுமின்றி அடிமையாகியுள்ளது.
ஒவ்வொரு பெற்றோர்களதும் ஆசையும் கனவும் தனக்கு பிறக்கயிருக்கின்ற குழந்தையை இறுதி வரைக்கும் நல்ல பிள்ளையாக வாழ வைக்க வேண்டுமென்பதாகும். ஆனால் கவலைக்குறிய விடயம் முஸ்லிம் வாலிபர்களும் முஸ்லிம் யுவதிகளும் தங்களுடைய பெறுமதியான இளமைப் பருவத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்று அதிகமான முஸ்லிம் வாலிபர்களும் யுவதிகளும் சினிமாவினை கடுமையாக நேசித்துக் கொண்டிருக்கின்றார்கள். எந்தளவிற்கென்றால் வீடுகளில் பார்த்து வந்த இந்த சினிமாவை தியேட்டர்கள் என்று சொல்லப்படுகின்ற ஷைத்தானுடைய இல்லத்துக்கு சென்று பார்க்கின்ற அளவுக்கு சமூகத்தில் உள்ள இளைஞர்களும் யுவதிகளும் மாறிவிட்டனர்.
இது தவிர மது போதைக்கு அடிமையான சமூகமாகவும் இசை கலாச்சாரத்தை அல்குர்ஆனை விரும்புவதை விடவும் பன்மடங்கு விரும்பக்கூடிய சமூகமாக எம்முஸ்லிம் சமூகம் இருப்பது மிகவும் வேதனை தரக்கூடிய உண்மையாகும்.
பல்கலைக்கழகம் சென்று என்னுடைய பிள்ளை உயர் கல்வியை கற்க வேண்டும் என்று எத்தனையோ பெற்றோர்கள் சந்தோஷமாக அங்கு அனுப்புகின்றார்கள். ஆனாலும் குறிப்பாக முஸ்லிம் வாலிப பெண்கள் அங்கு மாற்று மத ஆண்களுடன் மோசமான தொடர்புகளை வைத்துக் கொள்கின்றார்கள். எப்படி ஒரு ஆண் இன்னுமொரு ஆணுடன் தொடர்பு வைத்திருப்பானோ அதே போன்ற தொடர்பினையே முஸ்லிம் வாலிப பெண்கள் மாற்று மதத்தவர்கள் என்று கூட பார்க்காது அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கின்றனர்.
இப்படிப்பட்ட ஒவ்வொரு சீர்கேடுகளும் சமூகத்திலிருந்து கழற்றி எறியப்பட்டு எதிர்கால தலைமுறையினரை இஸ்லாத்துக்கு பொறுத்தமானவர்களாக மாற்றுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.
ஒரு வீட்டைக் கட்டுகின்ற போது எப்படி அதன் அத்திவாரத்தை பலமாகக் கட்ட வேண்டுமோ அதே போன்று குழந்தைகளை பெறுவதற்கு முன் தனக்கு தேடுகின்ற துனைவியை ஸாலிஹான ஒருவராகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஆண் எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமென்ற அழகிய உபதேசத்தை தந்திருக்கின்றார்கள். அந்தவகையில்தான் மார்க்கமுள்ள பெண்ணை திருமணம் செய்யுமாறு சொல்லித் தந்திருக்கின்றார்கள்.
ஒரு மனிதன் மார்க்கப்பற்றுள்ள பெண்ணை திருமணம் செய்வதன் மூலம் தனக்கு பிறக்கயிருக்கின்ற குழந்தையையும் ஸாலிஹான பிள்ளையாக மாற்றமுடியும். இந்த உண்மையை வரலாற்று நிகழ்வுகளில் தெளிவாக புரிந்து கொள்ளலாம். நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நீண்ட காலமாக பிள்ளைகளில்லாமல் இருந்தார்கள். இக் காலப்பகுதியில் தான் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களை குழந்தையாகக் கொடுத்து சிறிது நாட்களிலேயே பாலைவனத்தில் தாயுடன் விட்டு விட்டு வருமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
சிறு வயதிலிருந்து தாயின் அரவணைப்புடன் மாத்திரம் வளர்கின்றது. அறிகின்ற பருவத்தை இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அடைந்த உடன் அல்லாஹ் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அறுக்குமாறு கனவின் மூலம் காட்டுகிறான். இந்த விடயத்தைப் பற்றி மகனிடத்தில் தந்தை கூறியவுடன் எந்தவித தயக்கமுமின்றி அல்லாஹ்வுடைய கட்டளையை நிறைவேற்றுங்கள் என்று துணிந்து சொல்கின்றது என்றால் அவர் வளர்கின்ற போது ஈமானை சுமந்த தாயிடம் வளர்ந்தார்கள். ஈமானை சுமந்த தாய் தன்னுடைய பிள்ளையையும் ஈமானிய பண்புள்ள பிள்ளையாக வளர்த்திருக்கிறார்கள். எனவே தாயினுடைய அரவணைப்பில்தான் பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் தங்கியுள்ளது.
இந்த செய்தியை இன்னுமொரு வரலாற்று நிகழ்வின் மூலம் விளங்குவதாக இருந்தால், அல்லாஹ் காபிரான பெண்களுக்கு உதாரணம் காட்டக்கூடியவர்களில் ஒருவர்தான் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களது மனைவியாகும்.
அல்லாஹ் கப்பலைக் கட்டுமாறு நூஹ் நபிக்கு கட்டளையிட்டு விட்டு தூபான் என்ற வெள்ளத்தை அனுப்புகிறான். இந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்கள் கப்பலில் ஏற்றப்பட்டு காப்பாற்றப்பட்டார்கள். அல்லாஹ்வை மறுத்தவர்கள் மூழ்கடிக்கப்பட்டார்கள். இவ்வாறு மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களது மகனாகும்.
அவன் கடைசி நேரம் வரை ஈமான் கொள்ளவில்லை. அவனது தாயும் அல்லாஹ்வுக்கு இணைவைத்த காபிர் அவளது பராமரிப்பில் வளர்ந்த மகனும் காபிர். எனவே சுருக்கமாக விளங்குவதாக இருந்தால் ஒரு பிள்ளையின் பண்பாட்டில் தாக்கம் செலுத்த கூடிய காரணிகள் மிக முக்கியமானது தாயின் அரவணைப்பாகும்.
அதே போன்று பிள்ளைகளை ஸாலிஹான பிள்ளைகளாக வளர்ப்பதாக இருந்தால் சிறிய வயதிலிருந்தே சிறந்த தர்பியாவுடன் வளர்க்க முன்வரவேண்டும். இதனால் தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்று பழமொழியும் சொல்லப்படும். எனவே சிறு வயது முதல் தர்பியாவுடன் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். ஆனால் இன்றைய சமூகம் இவ்விடயத்திலும் கோட்டை விடுகின்றார்கள். எப்படியென்று கேட்டால் யாராவது வீட்டுக்கு வந்து போகின்ற போது “பாய் காட்டுங்க டாடா காட்டுங்க” இப்படிப்பட்ட வார்த்தைகளை மாத்திரமே கற்றுக் கொடுக்கின்றோமே தவிர ஸலாம் சொல்லுங்கள் இதனுடன் இணைந்த நல்ல வார்த்தைகளை சொல்லிக் கொடுப்பது குறைவாகவே காணப்படுகின்றது. எனவே பிள்ளைகளுக்கு சரியான நேரத்தில் தர்பியாக்கள் வழங்குவது அவர்களை ஸாலிஹான மக்களாக உருவாக்குவதற்கு ஒரு காரணியாக அமைகின்றது.
மேலும் பிள்ளைகளது ஒழுக்க விழுமியங்களில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய காரணிகள் ஒன்றுதான் சமகாலத்தில் கல்வியினை புகட்டுகின்றோம் என்ற பெயரில் ஆண்கள் பெண்கள் களக்கின்ற வண்ணம் வகுப்பகளை நடாத்துவதாகும். அது பாடசாலை நேரமாக இருந்தாலும் சரி அல்லது மாலை நேர வகுப்புகளாக இருந்தாலும் சரி ஆண் பெண் கலக்கின்ற வண்ணம் இத்தகைய காரியங்களை செய்வது அவர்களுடைய உள்ளங்களில் வீணான ஆசைகளை ஏற்படுத்தி அவர்களது பண்பாடுகளில் மோசமான விளைவுகளை கொண்டு வருவதற்கும் காரணியாக அமைகின்றது. எனவே ஒவ்வொரு பெற்றோரும் இந்த விடயத்திலும் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.
இறுதியாக எவைகளெல்லாம் பிள்ளைகளது ஒழுக்கத்துக்கு பாதிப்பாக அமையுமோ அவைகளைக் கண்டறிந்து அவைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் ஸாலிஹான மக்களாக வளர்வதுடன், பெற்றோர் மரணித்தாலும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.
எனவே நம்முடைய பிள்ளைகளையும் நல்ல பிள்ளைகளாக வளர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.