-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி
உலகத்தில் விலை மதிக்க முடியாத அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்று தான் எமக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற இந்த ஹிதாயத் என்று சொல்லப்படுகின்ற நேர்வழியாகும். இதற்காக வேண்டி நாம் வாழ்நாள் முழுவதும் அல்லாஹ்வுக்கு ஸூஜூதில் இருந்தால் கூட அதற்கு ஈடாகமாட்டாது.
நாம் நாளந்தம் எத்தனையோ விதமான பொருட்களை கடவுள் என்று நினைத்து வணங்கக்கூடிய மக்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அவைகளை வைத்து நமக்கு அல்லாஹ் வழங்கிய நேர்வழியின் பெறுமதியை உணர முடியவில்லை.
மனிதன் முஸ்லிமாக பிறப்பதில் எந்தவித சிறப்புமே கிடையாது. அந்த இஸ்லாத்திலேயே வாழ்ந்து அதிலேயே மரணிப்பதில்தான் மறுமையினுடைய வெற்றியும் கூட தங்கியிருக்கின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் உலகில் பிறக்கின்ற எல்லா குழந்தைகளும் இயற்கையான மார்க்கத்திலேயே பிறக்கின்றன. அவர்களுடைய பெற்றோர்கள்தான் அக்குழந்தையை ஒரு நெருப்பு வணங்கியாகவோ அல்லது அல்லாஹ்வுக்கு இணை வைக்கக் கூடியவர்களாக மாற்றுகின்றார்கள் என்று கூறியிருக்கின்றார்கள்.
அந்த வகையில் உண்மையாக வணங்கப்பட தகுதியான அல்லாஹ்வை வணங்கக்கூடிய எம்மையும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கக்கூடிய மற்றைய மதத்தினரும் பிறக்கின்ற போது சமமானவர்களாகவே பிறந்திருக்கின்றோம். ஆனால் படிப்படியாக வளருகின்ற போது அல்லாஹ் எமக்கு ஹிதாயத் எனும் நேர்வழியை தந்தான் அவர்களுக்கு நேர்வழியை வழங்கவில்லை.
அல்லாஹ்வுடைய இரண்டு நண்பர்களான இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களதும் பெற்றோர்களுடைய நிலைப்பாட்டைப் பார்க்கின்ற போது அவர்கள் அல்லாஹ்வுக்கு பகிரங்கமாக இணைவைப்பவர்களாக வாழ்ந்து மரணித்திருக்கின்றார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது தந்தை சிலைகளை தன்னுடைய கைகளால் செய்து அதனை விற்பவராகவும் வணங்குபவராகவும் இருந்திருக்கின்றார்கள். ஒரு கணம் நாம் சிந்திக்க வேண்டிய விடயம்தான் இந்த நபிமார்களது குடும்பத்துக்கே கிடைக்காத ஹிதாயத்தினை அல்லாஹ் எமக்கு தந்திருக்கின்றான் என்றால் ஹிதாயத்தின் பெறுமதியை கட்டாயமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
அன்றைய காலத்தில் வாழ்ந்த ஸஹாபாக்கள் ஒவ்வொருவரும் ஈமானுடைய பெறுமதியை உணர்ந்தவர்களாக வாழ்ந்திருக்கின்றார்கள்.
பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அடிமையாக இருக்கின்ற போது அவர்களுடைய எஜமான் அவரை துன்புறுத்த ஆரம்பிக்கின்றான். சுடு மண்ணில் போட்டு பாரங்கல்லை அவர்களுடைய நெஞ்சின் மீது ஏற்றுகின்றான். ஆனால் பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களது கொள்கையை யாருக்காகவும் விட்டு விடவில்லை இறுதி வரைக்கும் அல்லாஹ் ஒருவனே என்று சொன்னவர்களாகவே இருந்தார்களானால் நேர்வழியின் பெறுமதியை அவர்கள் தான் உண்மையாக உணர்ந்திருக்கின்றார்கள்.
அதே போன்று பெண்களில் வீர மரணம் அடைந்தவர்தான் சுமையா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதற்காக மர்ம உறுப்பில் ஈட்டியால் குத்தப்பட்டு ஷஹீதானார்கள்.
இவ்வாறு நேர்வழியின் உண்மையான சுவையை அவர்கள் தான் உணர்ந்தவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
ஆனால் இன்றைய காலத்தில் நாமும் அந்த ஸஹாபாக்கள் ஏற்றுக் கொண்ட இஸ்லாத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். என்றாலும் நாமோ உலகம்தான் வாழ்கை என்பது போல் உலகத்தை மாத்திரம் எதிர்பார்த்தவர்களாக இருக்கின்றோம்.
தொழுகையை வேண்டுமென்று விடுபவர்களாகவும், மானக்கேடான காரியங்களை செய்வதில் கவனமற்றவர்களாகவும் இருந்து கொண்டிருக்கின்றோம்.
உலக வாழ்வின் வரையரையாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 60 தொடக்கம் 70 வரையுள்ள காலமாக குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஆனால் மறுமை வாழ்வென்பது முடிவில்லாத நிரந்தரமான வாழ்வாக இருந்து கொண்டிருக்கும் போது ஷைத்தான் எம்முடைய உள்ளத்தில் உலகத்தை அலங்காரமாகவே காட்டிவிட்டான். இந்த வாழ்கையின் இன்பத்தை அடைய வேண்டுமென்பதற்காக அல்லாஹ்வுடைய கோபத்தை ஏற்படுத்தக்கூடிய சில காரியங்களை செய்கின்றோமே அதே நிலையில் எனக்கு மரணம் வந்துவிட்டால் எம்முடைய மறுமை வாழ்வின் நிலை என்ன?
சமுதாயத்தில் அதிகமான நிகழ்வுகளை பார்க்கலாம். ஒரு பெண்ணை கண்டுவிட்டால் அவள் அல்லாஹ்வுக்கு இணை வைப்பவளாக இருந்தாலும் அவளை அடைய வேண்டுமென்பதற்காக மார்க்கத்தையே விடுகின்றோமே அல்லது அழகான ஒரு ஆணைக் கண்டு அவனை அடைய வேண்டுமென்பதற்காக மார்க்கத்தையே விடுகின்றோமே திருமணம் முடித்து ஒரு நாள் இன்பம் அனுபவித்து விட்டு அடுத்த நாள் என்னுடைய உயிர் கைப்பற்றப்பட்டு விட்டால் நான் நிரந்தர நரகவாசியாக மாறிவிடுவேனே. அல்லது இருபது வருடங்கள் முப்பது வருடங்கள் வாழ்ந்தாலும் மரணம் என்ற முடிவு எம்மைக் காத்துக் கொண்டே இருக்கின்றது. அம்மரணம் வருகின்ற வரை காட்டக்கூடிய விளையாட்டுக்களையெல்லாம் காட்ட முடியும். மரணிக்கின்ற நேரம் வந்து விட்டால் எம்மை யாருமே காப்பாற்ற முடியாது. அதன் பின் நிரந்தர நரகவாசியாக மாறிவிடுவேனே நாம் ஈமானுடைய உண்மையான பெறுமதியை உணர மறுக்கின்றோம்.
எனவே வாழ்கின்ற இந்த குறுகிய காலப்பகுதியில் ஈமானுடைய பெறுமதியை உணர்ந்தவர்களாக நாம் ஒவ்வொருவரும் வாழ முயற்சிக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வினால் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே
“உள்ளங்களை பிரட்டக் கூடியவனே என்னுடைய உள்ளத்தை உன்னுடைய மார்க்கத்தில் உறுதிப்படுத்துவாயாக”
என்று தொடர்ந்தும் பிரார்த்திக்கிறார்கள். அந்தடிப்படையில் நாமும் வாழுகின்ற காலப்பகுதியில் அல்லாஹ் எமக்களித்த நேர்வழியின் பெறுமதியை உணர்ந்தவர்களாக வாழ இறைவன் அருள் புரிவானாக.