Home / அறிவுரைகள் / நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம்…

நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம்…

بسم الله الرحمن الرحيم.

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி

அல்லாஹ்வை மாத்திரம் இறைவனாக ஏற்ற முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தமக்கு மத்தியில் கொள்கையடிப்படையில் சகோதரர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். தன்னுடனேயே பிறந்து ஒன்றாக வளர்ந்த உடன் பிறந்த சகோதரன் ஏதாவது தவறு செய்கின்ற போது எப்படி அவனை அத்தவறை விட்டும் தடுக்கின்றோமோ அதே போன்று கொள்கை ரீதியாக சகோதரர்களாக இருக்கின்ற நாமும் தவறுகள் செய்கின்ற போது நமக்கு மத்தியில் திருத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

இந்தடிப்படையில் நன்மையை ஏவி தீமையை தடுக்கின்ற இந்த செயற்பாடானது ஒரு சிறந்த பணியாக இருந்து கொண்டிருக்கின்றது. முன் வாழ்ந்த சமுதாயங்களை விட சிறந்த சமுதாயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சமூகம் காணப்படுகிறது. அதற்குரிய காரணியாக இந்த பணியும் இருந்து கொண்டிருக்கின்றது.

“மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தர்களிலெல்லாம் மிக்க மேலான சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள். தீமையை விட்டும் அவர்களை தடுக்கிறீர்கள்.”
(ஆலுஇம்ரான்:110)

என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறியும் இருக்கிறான்.

இந்த வகையில் இஸ்லாத்தில் மிக முக்கியமான காரியமாக நன்மையை ஏவி தீமையை தடுத்தல் என்ற நற்காரியம் இருந்து கொண்டிருக்கின்றது.

▪நன்மையை ஏவி தீமையை தடுப்பதன் படித்தரம்:

நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல் என்ற உன்னதமான பணியைக் கற்றுத் தந்த இம்மார்க்கம், அந்தப் பணியை எப்படி செய்ய வேண்டும் என்று அதனுடைய படித்தரங்களை சொல்லித் தர தவறவில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற தான் கேட்டதாக அபூ ஸஈத் அல் ஹுத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்

“உங்களில் ஒருவர் ஏதாவதொரு வெறுக்கத்தக்க செயலைக் கண்டால் தனது கை மூலம் மாற்ற முயற்சிக்கட்டும். அதற்கவர் சக்தி பெறாவிட்டால் தனது நாவைக் கொண்டு மாற்ற முயற்சிக்கட்டும். அதற்குமவர் சக்தி பெறாவிட்டால் தனது உள்ளத்தால் அதை வெறுக்கட்டும். அதுவே ஈமானின் மிகத் தாழ்ந்த நிலையாகும்.”
(முஸ்லிம்)

மேற்கண்ட நபிமொழி நன்மையை ஏவி தீமையை தடுப்பதன் படித்தரங்களை சுருக்கமாகவும் கட்டம் கட்டமாகவும் தெளிவுபடுத்துகின்றது.

ஆகவே சமுதாயத்தில் மார்க்கத்துக்கு முரணாக செயல்கள் இடம்பெறுகின்ற போது முதலாவது கையினால் தடுக்க முயற்சி செய்ய வேண்டும். இந்த முதலாவது, கட்டத்தை செய்ய எல்லோரும் சக்தி பெறமாட்டார்கள். எனவே இவர்கள் அடுத்த கட்டமாகிய நாவினால் சத்தியத்தைச் சொல்ல வேண்டும். இதற்கும் முடியவில்லையென்றால் உள்ளத்தால் வெறுக்க வேண்டுமென்று சொல்லித் தந்திருக்கின்றது.

இதில் உள்ளத்தால் வெறுத்து செல்ல வேண்டும் என்ற செய்தியை அதிகமானவர்கள் தவறாக புரிந்திருக்கிறார்கள். மார்க்கத்தை அவர்களுக்கு சொல்லாமல் விடாமல் விடுவதே உள்ளத்தால் வெறுத்தல் என்று எண்ணியிருக்கின்றனர். உண்மையில் உள்ளத்தால் வெறுப்பதென்பது, நாம் அவர்களை வெறுத்து நடக்கும் போது தவறு செய்பவர்களே தான் செய்த இத்தவறினால்தான் என்னை வெறுக்கின்றனர். இதுதான் உள்ளத்தால் வெறுப்பதை உணர்த்தி நிற்கின்றது.

▪நன்மையை ஏவி தீமையை தடுப்பதன் முக்கியத்துவம்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்

“விலக்கப்பட்டவைகளிலிருந்து மக்களைத் தடுப்பவர்களுக்கும் விலக்கியவைகளைச் செய்பவர்களுக்கும் உதாரணம் கப்பலில் சீட்டுப் போட்டுக் கொண்டவர்களைப் போன்றாகும்.சிலர் கப்பலின் மேல் தளத்திற்கும் சிலர் கப்பலின் கீழ்த் தளத்திற்கும் நிர்ணயிக்கப்பட்டனர். கீழ்த்தளத்தில் உள்ளவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டால் மேல் தளத்தில் உள்ளவர்களைக் கடந்து செல்ல வேண்டும். அதனால் கீழ்த் தளத்தில் உள்ளவர்கள் ‘நாம் மேல்தளத்தில் உள்ளவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தாமல் எங்கள் பகுதியிலேயே ஒரு துவாரத்தை இட்டுக் கொண்டால் என்ன?’ என்று பேசிக் கொண்டனர். மேல்தளத்தில் உள்ளவர்கள் அவர்கள் நாடியபடி செய்ய விட்டு விட்டால் அனைவரும் அழிந்து விடுவர். மாறாக மேலுள்ளவர்கள் தடுத்து நிறுத்தினால் அவர்களும் தப்புவார்கள் மற்றவர்களும் தப்பிப்பார்கள்”
(புஹாரி)

இந்த நபிமொழி சத்தியத்தை சொல்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. சத்தியத்தை யாருமே சொல்லாது விடுகின்ற போது அழிவு எந்த வித்தியாசமுமின்றி நல்லவர்கள் கெட்டவர்களை சூழ்ந்து கொள்ளும்.

▪நன்மையை ஏவி தீமையை தடுப்பவர் கடைபிடிக்க வேண்டிய பண்புகள்:

நன்மையை ஏவி தீமையை தடுக்கின்றேன் என்று கூறி விரும்பிய விடயங்களை எல்லாம் செய்து விடமுடியாது.

உதாரணத்திற்கு

ஒருவர் அகீதாவுடைய விடயத்தில் தவறில் இருந்து கொண்டிருக்கிறார் என்றால் அவருக்கு சத்தியத்தை எடுத்துச் சொல்வது நல்ல பணிதான். ஆனால் சத்தியத்தை சொல்கின்றேன் என்றே பெயரில் அகீதாவில் தவறில் இருப்பவரை வேறொரு வழிகாட்டலை சொல்லி மேலும் வழிகேட்டுக்குள்ளே நுழைவித்து விடக்கூடாது. எனவே அதற்குரிய சில பண்புகளை சத்தியத்தை சொல்பவர் கொண்டிருக்க வேண்டும். அந்தப் பண்புகளில் சில,

01) அறிவு :-

நன்மையை ஏவி தீமையை தடுக்கின்ற போது அறிவு என்பது மிக முக்கியமாக இருக்க வேண்டும். அறிவில்லாத பிரச்சாரம் தெளிவினை பெற்றுத்தராமல் குழப்பத்தையே மென்மேலும் அதிகரிக்கும்.

இதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரச்சாரத்தை அல்லாஹ் கூறும் போது,

“நபியே நீர் கூறுவீராக இது தான் என்னுடைய பாதை. நான் அல்லாஹ்வின் பாதையில் தெளிவில் இருந்து கொண்டு அழைக்கிறேன்”
(அல் யூஸுப் :108)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

“நிச்சயமாக அல்லாஹ் அறிவினை ஒரே பிடியில் கைப்பற்றமாட்டான். என்றாலும் உலமாக்களை கைப்பற்றுவது கொண்டு அறிவும் கைப்பற்றப்படும். பின்பு மக்களில் மடையர்கள் எஞ்சியிருப்பார்கள். அவர்கள் மக்களுக்கு அறிவில்லாமல் பத்வாக்களை வழங்குவார்கள். இதனால் அவர்களும் வழிகெட்டு மக்களும் வழிகெடுக்கப்படுவார்கள்.
( புஹாரி முஸ்லிம் )

ஆகவே இவ்வுயரிய பணியை செய்பவர் முதலில் அந்த விடயத்தில் அறிவுள்ளவராக இருக்க வேண்டும்.

2)இரக்க குணமுள்ளவராகவும் மென்மையான போக்குள்ளவராகவும் இருக்க வேண்டும்.

கடினமான போக்குள்ளவர்களாக இப்பணியை செய்பவர்களாக இருந்தால் மக்கள் அவர்கள் சொல்லக்கூடிய விடயத்தை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டுவார்கள்.

3)நீதியுள்ளவராக இருக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு நன்மை தீமைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற போது அதில் நீதியுள்ளவராக இருக்க வேண்டும். தனக்கு விருப்பத்துக்குறியவர்கள் தவறு செய்கின்ற போது அவர்களுக்கு சத்தியத்தை சொன்னால் ஏதாவது பகை ஏற்பட்டுவிடும் என்பதற்காக அவர்களுக்கு சொல்லாமல் விடுதல் என்ற போக்கை இந்தப் பணியை நிறைவேற்றுகின்ற போது தவிர்ந்து கொள்ள வேண்டும்.

4)ஹிக்மத் என்று சொல்லப்படும் விவேகமான சிந்தனை இருக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்

” (நபியே) நீர் விவேகத்தைக் கொண்டு மற்றும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டு உமதிரட்சகனின் வழியின் பக்கம் அழைப்பீராக”
(அந்நஹ்ல்:125)

5)பொறுமையுள்ளவராக இருக்க வேண்டும்:

இத்தூய பணியை செய்யக்கூடிய ஒவ்வொரு மக்களிடத்திலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பு இதுதான். சிலர் மக்களுக்கு சத்தியத்தை சொல்லுகின்ற போது ஏதாவது கஷ்டங்கள் எதிர்ப்புகள் வந்துவிட்டால் நம்பிக்கை இழந்து உடனே இப்பணியை விடக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

உண்மையில் முன்வாழ்ந்த ஒவ்வொரு நபிமார்களும் ஸஹாபாக்களும் மக்களுக்கு சத்தியத்தை சொல்லுகின்ற போது சொல்லன்னா துன்பங்களை எதிர்கொண்டார்கள். ஆனால் அதற்காக நம்பிக்கை இழக்காமல்
பொறுமையாக இருர்தார்கள்.

ஆகவே ஒவ்வொரு அழைப்பாளர்களும் இந்த 5 பண்புகளையும்
கட்டாயமாக கொண்டிருக்க வேண்டும்.

▪நன்மையை செய்யாமல் மற்றையவர்களுக்கு சொல்வதன் விபரீதம்:

தான் ஒரு நல்ல அமலை செய்யாமல் மற்றவர்களுக்கு அதனைப் பற்றி சொல்வது மிகப் பெரிய பாவமாக கருதப்படுகிறது.

அல்லாஹ் கூறுகிறான்

“விசுவாசம் கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் கூறுகின்றீர்கள். நீங்கள் செய்யாததை கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிக பெரிதாகி விட்டது.
(61:2,3)

அதே போன்று செய்யாத அமல்களை மற்றயவர்களுக்கு சொல்வதன் விபரீதத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு எச்சரித்திருக்கின்றார்கள்.

“கியாமத் நாளில் ஒரு மனிதன் கொண்டு வரப்பட்டு நரகில் போடப்படுவான். அவனது வயிற்றிலுள்ள குடல்கள் வெளியாகிவிடும். கழுதை திருகையை சுற்றுவது போல (வேதனையால்) அவன் தன் குடலைச் சுற்றுவான். நரகவாதிகள் அவனிடம் ஒன்று கூடி ‘மனிதனே! உனக்கு என்ன ஆனது? நீ நன்மையை ஏவி தீமையை தடுத்துக் கொண்டிருக்கவில்லையா’ எனக் கேட்பார்கள். அதற்கவன் ‘ஆம்’ நான் நன்மையை செய்யாமல் அதை ஏவக்கூடியவனாக இருந்தேன். தீமையை செய்து கொண்டு அதைத் தடுப்பவனாக இருந்தேன்’ என விடையளித்தான்.
(புஹாரி முஸ்லிம்)

எனவே இந்த உயரிய பணியை அல்லாஹ்வுக்காக செய்து அல்லாஹ்வும் அவனது தூதரின் வழிகாட்டல் படி செய்ய அல்லாஹ் அருள்புரிவானாக.

Check Also

பிள்ளைகளுக்கு பெற்றோர் செய்யும் கடமைகள்

பிள்ளைகளுக்கு பெற்றோர் செய்யும் கடமைகள் அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) தேதி : 26 – 11 – 2020 …

Leave a Reply