துல் ஹஜ் பத்தாவது நாள் – ஹாஜிகள் செய்ய வேண்டிய அமல்கள்
1. ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிவது 2. குர்பானி கொடுப்பது 3. தலையை முழுமையாக மழிப்பது அல்லது முழுமையாக குறைத்துக் கொள்வது 4. தவாஃபுல் இபாழாவை செய்வது,
இந்த நான்கு அமல்களையும் வரிசையாகத்தான் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை முற்படுத்தியும் பிற்படுத்தியும் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. இந்த சலுகைகளை குறித்து ஹாஜிகளை வழி நடத்துபவர்கள் முறையாக பயிற்று வித்தாலே அசம்பாவிதங்களை தவிர்க்கலாம் . எல்லோரும் ஒரே அமலை ஒரே நேரத்தில் செய்ய முற்படும்போது தான் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது .
1735. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (நூல்:புகாரி )
நபி(ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது துல்ஹஜ் 10ஆம் நாள் பல கேள்விகள் கேட்கப்பட்டதற்கு ‘குற்றமில்லை!’ என்றே பதில் கூறினார்கள். ஒருவர் ‘நான் பலியிடுவதற்கு முன் தலையை மழித்து விட்டேன்!’ என்று கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை! (இப்போது) பலியிடுவீராக!’ எனக் கூறினார்கள். பிறகு அவர் ‘நான் மாலை நேரமான பின்பே கல்லெறிந்தேன்!’ என்றதும் நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை!’ என்றார்கள்.
1736. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது (தம் வாகனத்தின் மீது) அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் அவர்களிடம் (சில சந்தேகங்களை) கேட்கத் தொடங்கினர். ஒருவர், ‘நான் பலியிடுவதற்கு முன்பாக, உணராமல் தலையை மழித்து விட்டேன்!’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை! (இப்போது பலிப்பிராணியை) அறுப்பீராக!’ என்று கூறினார்கள். பிறகு இன்னொருவர் வந்து ‘கல்லெறிவதற்கு முன்பு அறியாமையினால் அறுத்து பலியிட்டுவிட்டேன்’ எனக் கூறியதும் அவர்கள் ‘குற்றமில்லை! இப்போது கல்லெறிவீராக!’ என்று கூறினார்கள். அன்றைய தினம் (பிற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில வழிபாடுகள் முன்னதாகச் செய்யப்பட்டுவிட்டதாகவும் (முன்னதாகச் செய்யப்படவேண்டிய) சில வழிபாடுகள் பிற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் கேட்கப்பட்ட அனைத்திற்கும் நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை! (விடுபட்டத்தைச்) செய்வீராக!’ என்றே கூறினார்கள்.
1738. அப்துல்லாஹ் இப்னு அம்ர்ப்னுல் ஆஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது வந்தேன். அப்போது ஒருவர் எழுந்து, ‘நான் இதற்கு முன் இது என நினைத்தேன்!’ என்றார். இன்னொருவர் எழுந்து, ‘நான் இதற்கு முன் இது என நினைத்தேன்! பலியிட்டு விட்டேன்!’ என இது போன்றவற்றைக் கூறலானார். அவ்வனைத்திற்குமே நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை! (விடுபட்டதைச்) செய்யுங்கள்!’ என்றே கூறினார்கள். அன்றைய தினம் வினவப்பட்ட எல்லாவற்றிற்குமே அவர்கள் ‘குற்றமில்லை! (விடுபட்டதைச்) செய்யுங்கள்!’ என்றே கூறினார்கள்