துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்பு
துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. சாந்தியும் சமாதானமும் அவனுடைய தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், உலக முஸ்லீம்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!
அல்லாஹ் நம்மீது கொண்டிருக்கும் கருணையின் காரணமாக நமது பாவங்கள் மன்னிக்கப் படுவதற்கும் அவனுடைய அருளை நாம் பெறுவதற்கும் பல சந்தர்ப் பங்களை நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கின்றான். அந்த சந்தர்ப்பங்களில் ஒன்றுதான் துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். இந்நாட்களின் சிறப்புகளை சொல்கின்ற பல குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்கள் வந்துள்ளன.
وَالْفَجْرِ وَلَيَالٍ عَشْرٍ ( الفجر: 1-2)
விடியற்காலையின் மீது சத்தியமாக, பத்து இரவுகளின் மீது சத்தியமாக 89: 1,2
பத்து இரவுகள் என்று இங்கு குறிப்பிடுவது துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். என இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி), இப்னு சுபைர் (ரஹ்), முஜாஹித் (ரஹ்), போன்ற அறிஞர்களின் கூற்றை ஆதாரமாக குறிப்பிடுகின்றார்கள். இப்னு கஸீர் : 8 / 413
وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ 22:28
“அல்லாஹ்வின் பெயரை குறிப்பிட்ட நாட்களில் அவர்கள் கூறுவதற்காகவும் …. 22:28 இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்: குறிப்பிட்ட நாட்கள் என்பது துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ஆகும். ( தஃப்ஸீர் இப்னு கஸீர் )
நபி (ஸல்) கூறினார்கள் : “(துல் ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களான) இந்த நாட்களில் செய்கின்ற எந்தச் செயலும் மற்ற நாட்களில் செய்யும் செயல்களை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும். என்று நபி (ஸல்) கூறினார்கள். ” இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் வழியில் போராடுவதை விடவா? சிறந்தது என்று (நபித்தோழர்கள்) கேட்டார்கள். “(ஆம்) அல்லாஹ்வின் வழியில் போராடுவதை விட வும் சிறந்தது தான். எனினும் ஒரு மனிதர் தன்னையும், தன் பொருளையும் (இறைவழியில்) அர்ப்பணித்து வீர மரணம் அடைகிறாரோ அவரைத் தவிர” (அவரே மிகச் சிறப்புக்குரியவர்) எனக் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல் :புகாரி: 969
(துல் ஹஜ் மாத முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே தஹ்லீல் – லாஇலாஹா இல்லல்லாஹ், தக்பீர் – அல்லாஹ் அக்பர், தஹ்மீத் -அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரழி) ஆதாரம் : அஹ்மத் 5575
இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : துல் ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களின் சிறப்புக்குக் காரணம் இஸ்லாத்தின் தலையாய வணக்கவழிபாடுகள் இந்நாட்களில்ஒருங்கே அமைந்திருப்பதாகும்! தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகிய யாவும் இந்நாட்களில் நிறை வேற்றப்படுகின்றன! இந்த நிலை வேறு எந்த நாட்களிலும் அமைவதில்லை! எனவே நாம் இந்நாட்களில் பின் வரும் நல்அமல்களில் அதிக கவனம் செலுத்துவது சிறப்பாகும். ஃபத்ஹுல் பாரி : 2 / 534
இந் நாட்களில் செய்ய வேண்டிய விரும்பத்தக்க அமல்கள்
தொழுகை : கடமையான வணக்கங்களை முற்படுத்துவதும் உபரியான வழிபாடுகளை அதிகப் படுத்துவதும் (அல்லாஹ்வின் பக்கம்) நம்மை நெருக்கி வைப்பதில் சிறந்ததாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு நீ அதிகமாக சஜ்தா (சிரவணக்கம்)செய்வாயாக! ஏனெனில், நீ அவனுக்காக ஒரு சஜ்தாச் செய்தால் அதற்காக அவன் உனது ஒரு தகுதியை உயர்த்தி, உன் குற்றங்களில் ஒன்றை அவன் மன்னிக்காமல் இருப்பதில்லை என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரலி), நூல் : முஸ்லிம் 225
நோன்பு: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “எவரொருவர் அல்லாஹ்வுக்காக ஒரு நாளில் நோன்பு நோற்கின்றாரோ அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய முகத்தை நரகத்தை விட்டும் 70 வருட தொலை தூரத்திற்கு தூரமாக்குகிறான். அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல் குத்ரி (ரழி) ஆதாரம்: முஸ்லிம் 2/808
(நபி ஸல்) அவர்களின் மனைவிமார்களில் சிலர் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் துல் ஹஜ் மாதம் 9 ஆம் (அரஃபா) நாள் முஹர்ரம் மாதம் 10வது நாள் (ஆஷூரா) மாதத்தில்3 (12,13,14) நாட்கள் நோன்பு நோற்பார்கள். அறிவிப்பாளர்: ஹுனைதத் இப்னு காலித்(ரழி) நூல் : அஹ்மத் 22994
ஹஜ்ஜும் உம்ராவும் : நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் “ஒரு உம்ரா மறு உம்ராவரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை. அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி) நூல்: புகாரி 2 /629
தக்பீர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி), அபூஹுரைரா (ரழி) ஆகிய இரு நபித் தோழர்களும் (துல் ஹஜ்)பத்து நாட்களிலும் கடை வீதிகளுக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் தக்பீர் கூறுவதை செவியுற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள். புகாரி : 1/ 339
உமர் (ரழி) அவர்கள் மினாவில் தனது கூடாரத்தில் உரத்த குரலில் தக்பீர் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதைக் கேட்ட பள்ளிவாசலில் உள்ளவர்களும், கடைத்தெருக்களில் உள்ளவர்களும் மினாவே அதிரும் அளவுக்கு தக்பீர் சொல்லுவார்கள்.
இப்னு உமர் (ரழி) அவர்கள் மினாவில் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், கூடாரத்திலும்,படுக்கையிலும், மஜ்லிஸிலும், அனைத்து நாட்களிலும் தக்பீர் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்…. நூல்: புகாரி 4/123. எனவே நாமும் இந்தக் காலகட்டத்தில் தொலைந்து விட்ட சுன்னாவை உயிர்ப்பிக்க சப்தமாக தக்பீர் சொல்வது விரும்பத்தக்க செயலாகும்.
தக்பீரின் வாசகங்கள்
الله أكبر، الله أكبر، الله أكبركبيرا
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீறா
الله أكبر. الله أكبر. لاإله إلا الله والله أكبر .الله أكبر. ولله الحمد
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லா இலாஹ இல்லல்லாஹு
வல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் வலில் லாஹில் ஹம்து
الله أكبر. الله أكبر. الله أكبر. لا إله إلا الله ، الله أكبر. الله أكبر. ولله الحمد
அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர். லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து
அறஃ பா நாளன்று நோன்பு வைப்பது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- அல்லாஹ் நரகிலிருந்து தனது அடியார்களை அதிகமாக விடுதலை செய்யும் நாள் அறஃ பா நாளாகும்.இதைத் தவிர வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செய் வதில்லை. அல்லாஹ் அந்நாளில் இறங்கி வந்து, இவர்கள் என்ன விரும்புகின்றனர்? என்று தனது வானவர்களிடம் பெருமையாகக் கேட்பான்.(அறிவிப்பவர் ஆயிஷா (ரலி), ஆதாரம்: (முஸ்லிம்3354.)
நபி (ஸல்)அவர்கள் அறஃபா நோன்பை குறித்து கூறினார்கள் : அறஃபா நாளன்று நோன்பு வைப்பவருக்கு அந்நாளுக்கு முன் வருட பாவங்களையும், பின் வருட பாவங்களையும் அல்லாஹ் மன்னிப் பானென்று நம்பிக்கை கொள்கிறேன்” அறிவிப்பாளர்: அபூ கத்தாதா (ரழி) நூல் :முஸ்லிம் : 2803
குறிப்பு : ஹஜ் செய்பவர்களைத்தவிர மற்றவர்களுக்கு இந்நோன்பு வலியுறுத்தப் பட்டுள்ளது.
துல் ஹஜ் 10 வது நாளின் சிறப்பு : முஸ்லீம்களில் அதிகமானவர்கள் இந்த நாளின் சிறப்பையும், அதன் மகத்துவத்தையும் உணராமல் இருக்கின்றார்கள். இமாம் இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :குர்பானி நாள் அல்லாஹ்விடத்தில் மிகவும் சிறப்பான நாள் அதுவே ஹஜ்ஜுல் அக்பர் நாளாகும். ஸாதுல் மஆது 1/ 54
அல்லாஹ்விடத்தில் மிகவும் சிறப்பான நாள் குர்பானி நாள் (துல் ஹஜ் பத்தாவது நாள் ) பிறகு துல் ஹஜ் பதினோராவது நாள். ஆதாரம் : ஸுனன் அபூதாவூத் 1767
அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11,12,13)
தஷரீக்குடையநாட்கள்சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும், அல்லாஹ்வை நினைவு கூறுவதற்கும் உரிய நாட்களாகும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நுபைஷா (ரழி), நூல்: அபூதாவூத் 2 /109
அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! 13:28 இந்நாட்களில் நோன்பு நோற்பது தடுக்கப் பட்டுள்ளது. நபி (ஸல்) கூறினார்கள்: யார் நோன்பு நோற்றுள்ளாரோ அவர் நோன்பை விடட்டும். ஆதாரம் : அஹ்மத் : 28415
நன்மை தரும் நல் அமல்கள்
நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள் 2:148
இந்த நாட்களில் அதிகமான நல் அமல்களில் ஈடுபட வேண்டும். உடலாலும் பொருளாலும் சக்தி பெற்றவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவது, அல்லாஹ்வுக்காக குர்பானியை நிறைவேற்றுவது, அதிகமாக குர் ஆன் ஓதுவது, மனனம் செய்வது, ஓதத்தெரியாதவர்களுக்கு கற்றுக் கொடுப்பது, பாவமன்னிப்பு தேடுவது, பெற்றோர்களுக்கும், பெற்றோர்களின் நண்பர்களுக்கும் நன்மை செய்வது,
இரத்த பந்தங்களையும், உறவினர்களையும் ஆதரிப்பது, ஸலாத்தை பரப்புவது, பசித்தவர்களுக்கு உணவளிப்பது, மக்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்வது, நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது, நாவைப் பேணுவது, அண்டை வீட்டார்களுக்கு உதவுவது, விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது, அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வது, நடை பாதையில் மக்களுக்கு தொல்லை தருவதை அகற்றுவது,
மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் செலவு செய்வது, அனாதைகளை அரவணைப்பது, நோயாளிகளை நலம் விசாரிப்பது, பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவது, நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வது, பிரார்த்தனை செய்வது அப் பிரார்த்தனையில் பிற சகோதரர்களையும் இணைத்துக் கொள்வது, அமானிதங்களை பேணுவது, உடன்படிக் கைகளை நிறைவேற்றுவது, ஹறாமானவற்றிலிருந்து பார்வையை தாழ்த்திக் கொள்வது,
ஒளுவை பரி பூரணமாக செய்வது, பாங்கிற்கும் இகாமத்திற்கும் மத்தியில் துஆ செய்வது, ஐவேளை தொழுகையும் பள்ளிவாசலுக்கு சென்று நிறைவேற்றுவது, தஹஜ்ஜத் மற்றும் உபரியான தொழுகைகளில் அதிக கவனம் செலுத்துவது. தொழுகைக்குப் பின் ஓதவேண்டிய திக்ருகளை ஓதுவது, காலை, மாலை திக்ருகளை செய்வது, முஸ்லீம்களின் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் பங்கெடுப்பது… இது போன்ற அனைத்து நல் அமல்களிலும் ஈடு பட்டு அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெற்று மறுமையில் சுவனத்தை அடைய முயற்சிப்போம்!
யா அல்லாஹ்! எங்களது தீன் பற்றிய அறிவு ஞானத்தையும் அதன் படி அமல் செய்யும் பாக்கியத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக! அதில்எங்களைநிலைத்திருக்கச் செய்வாயாக! இறை விசுவாசிகளாக எங்களை மரணிக்கச் செய்வாயாக! மேலும் உத்தமர்களின் குழுவில் எங்களை சேர்ப்பாயாக! கருணை மிக்க இறைவனே! உனது கருணையினால் எங்களுக்கும் எங்கள் பெற்றோர்களுக்கும் அனைத்து முஸ்லீம்களுக்கும் பாவமன்னிப்பு வழங்குவாயாக!
தயாரிப்பு: அஷ்-ஷேக் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அல் ஜிப்ரீன் (ரஹ்)
மொழி பெயர்ப்பு : யாஸிர் ஃபிர்தௌஸி அழைப்பாளர் அல்- ஜுபைல் தஃவா நிலையம், சவூதி அரேபியா