Home / அகீதா (ஏனையவைகள்) / தஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகீதா தொடர் 03 |

தஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகீதா தொடர் 03 |

ஆசிரியர் :கலாநிதி அப்துல்லாஹ் பின் அப்தில் அஸீஸ் அல்ஜிப்ரீன் (றஹ்)

தமிழில் :A.R.M.றிஸ்வான் (ஷர்கி) M.A.

கடந்த தொடரில் மகத்துவமிகு அல்லாஹ்வை மூன்று விதங்களில் ஈமான் கொள்ளவேண்டுமென நோக்கினோம். அவற்றுள்,

முதலாவது :

தவ்ஹீத் அர்ருபூபிய்யா :

அல்லாஹ் ஒருவன் இருப்பதாக உறுதியாக நம்பி, உலைகையும் உலகிலுள்ள அனைத்தையும் படைத்தல், பாதுகாத்தல், அழித்தல், உணவளித்தல், நிர்வகித்தல், உயிர்ப்பித்தல் உள்ளிட்ட அனைத்து காரியங்களுக்கும் அவன் மாத்திரமே தகுதியானவன் என ஏற்றுக்கொள்வதே தவ்ஹீத் அர்ருபூபிய்யா ஆகும்.

“றப்பு” என்ற பதத்திலிருந்து உருவானதே ருபூபிய்யா ஆகும். “றப்பு” என்ற வார்த்தைக்கு படைப்பவன், ஆள்பவன், உணவளிப்பவன், திட்டமிடுபவன் என்பன போன்ற பல அர்த்தங்கள் உள்ளன. இவை அனைத்திற்கும் அல்லாஹ் மாத்திரமே சொந்தக்காரன் என்பதனால்தான் அவனை நாம் “றப்பு” என்றழைக்கிறோம்.

அல்லாஹ் மாத்திரமே ஒரே “றப்பு” என்பதை நிறுவுகின்ற சான்றுகள் அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் நிறைந்து கிடக்கின்றன. எடுத்துக்காட்டாக,

1⃣’படைத்தலும், ஆட்சிசெய்தலும் அவனுக்கே சொந்தம்’ (7:54).

2⃣ ‘அனைத்தினதும் ஆட்சி யார் கையில் உள்ளது என (நபியே) கேளுங்கள்’ (23:88).

அல்லாஹ்வின் ருபூபிய்யா3 எனப்படும் பண்பை புரிந்துகொள்ள வேண்டுமாயின் பரந்து விரிந்து கிடக்கும் இப் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள சிறியதும் பெரியதுமான படைப்புகளையும் உற்றுநோக்குமாறு அல்லாஹ் மனிதர்களிடம் சூளுரைக்கிறான்.

3⃣ ‘உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அவற்றை) நீங்கள் உற்றுநோக்கவேண்டாமா? ‘ (51:20, 21).

இப் பூமி முழுவதும் பரந்து காணப்படும் கடல்கள், நதிகள், மலைகள், பாலைவனங்கள், தாவரங்கள், செடிகொடிகள் போன்றவையும் மனிதன், மிருகம், பறவை போன்றவையும் அல்லாஹ்வின் மகோன்னதமிக்க படைப்பாற்றலையும் வர்ணனைகளைக் கடந்த அவனது வல்லமையையும் பறைசாற்றி நிற்கும் சான்றுகளாகும்.

அல்லாஹ்வின் படைப்புகளிலேயே உன்னதமிகு படைப்பாகிய மனிதனை உற்றுநோக்கினாலே அல்லாஹ்வின் பேராற்றல் புலப்படும். ஒரு சிறு விந்துத் துளியிலிருந்து இரத்தக்கட்டியாகி, பின்னர் சதையாகி, பின்னர் எலும்புகளைப் பெற்று, பின்னர் உயிர் ஊதப்பட்டு, பார்க்கின்ற, கேட்கின்ற திறனுடன் தாயின் வயிற்றிலிருந்து சிறுகுழந்தையாக வெளியேறி, பின்னர் வயது செல்லச் செல்ல மாபெரும் ஆற்றலும் இயக்கமும் கொண்ட முழு மனிதனாக மாறுகின்ற அதிசயிக்கத்தக்க செயன்முறை, அவனது உடலமைப்பு, உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றும் மிகக் கச்சிதமாக பொருத்தப்பட்டிருக்கும் பாங்கு, அவனது சிந்தனை, அறிவு, ஆற்றல், அம்மூன்றையும் பயன்படுத்தி அவன் இவ்வுலகில் மேற்கொள்ளும் பெரும் பெரும் காரியங்கள், மாபெரும் சாதனைகள்… என அனைத்தையும் சிந்தித்துப் பார்த்தால் வல்லமைமிக்க அல்லாஹ்வின் ஒப்புவமையற்ற படைப்பாற்றலை புரிந்துகொள்ள முடியும்.

இவ்வாறே இப்பிரபஞ்சத்தில் காணப்படும் ஏனைய படைப்பினங்களும் இவ்வுலகின் அற்புதமான இயங்குதன்மையும் அல்லாஹ்வின் இருப்பையும் அவனது படைப்பாற்றலின் பிரமாண்டத்தையும் கட்டியம் கூறி நிற்கின்றன.

அல்லாஹ் கேட்கிறான் :

5⃣ ‘ஒட்டகத்தை அவர்கள் கவனிக்கவேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று… மேலும் வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது என்றும், மலைகள் எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன என்றும், பூமி எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது (என்றும் அவர்கள் கவனிக்கவேண்டாமா?)’ (88:17-20).

மற்றுமொரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான் :

6⃣ ‘நிச்சயமாக வானங்களையும் பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும் பகலும் மாறி மாறி வந்துகொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதற்காக கடலில் செல்லும் கப்பல்களிலும் வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி (வரண்டு) இறந்தபின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லாவிதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றை மாறி மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் – சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும் கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன’ (2:163, 164).

கவிஞர் இப்னுல் முஃதஸ் தன் கவிதை வரிகளில் இவ்வாறு வினா தொடுக்கிறார் :

“ஆச்சரியமே! இறைமறுப்பாளன் எங்ஙனம் அவனை மறுக்கமுடியும்? உலகின் ஒவ்வொரு சலனத்திலும் ஒவ்வொரு மௌனத்திலும் இறைவன் இருப்பதற்கான சான்றுள்ளதே! ஒவ்வொரு பொருளும் ‘இறைவன் ஒருவனே’ என்பதை மெய்ப்பிக்கின்றதே!”

தவ்ஹீத் அர்ருபூபிய்யா என்பது அல்லாஹ்வை ஈமான் கொள்வதன் முதல் அம்சமாக இருந்த போதிலும் அதை மாத்திரம் ஏற்றுக்கொள்வதன் மூலம் ஒருவர் ஈமான் கொண்டவராக, இஸ்லாத்தை ஏற்றவராக கருதப்படமாட்டார்.
ஏனெனில் மக்காவில் வாழ்ந்த இணைவைப்பாளர்கள் கூட தவ்ஹீத் அர்ருபூபிய்யாவை ஏற்றுக்கொண்டே இருந்தார்கள்.அதாவது படைத்தல், உணவளித்தல், நிர்வகித்தல் போன்றவற்றை அல்லாஹ்வே செயற்படுத்துகிறான் என்று அவர்கள் முழுமையாக நம்பினார்கள்.

யமன் நாட்டின் பேரறிஞரான இமாம் முஹம்மத் பின் இஸ்மாஈல் அஸ்ஸன்ஆனி (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

“இறைத்தூதர்கள் அனுப்பப்பட்ட சமூகத்தினரான இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வே தம்மையும் வானம், பூமி என்பவற்றையும் படைத்ததாக ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வே இதுபற்றி கூறுகிறான்: ‘அவர்களைப் படைத்தது யார் என்று (நபியே) நீங்கள் அவர்களிடம் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று அவர்கள் உறுதியாகக் கூறுவார்கள்” (43:87).

“வானங்களையும் பூமியையும் படைத்தது யார்?’ என்று கேட்டால் மகத்துவமும் அறிவாற்றலுமிக்க அல்லாஹ் படைத்ததாக உறுதியாகக் கூறுவார்கள்” (43:9).

அல்லாஹ்வே உணவளிப்பவன், அவனே மரணித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல்பெற்றவன், வானம், பூமி முழுவதிலும் அனைத்து காரியங்களையும் திட்டமிட்டு செயற்படுத்துபவன் என்பதையெல்லாம் அந்த இணைவைப்பாளர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடுகிறான்.

‘உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்? ‘ என்று (நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ‘அல்லாஹ்’ என பதிலளிப்பார்கள்…’ (10:31).

இவ்வுலகில் தோன்றிய இறைமறுப்பாளர்களுள் மிக மோசமானவனான பிர்அவ்ன் கூட வானங்களையும் பூமியையும் படைத்தவன் அல்லாஹ் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தான்.

நபி மூஸா (அலை) அவர்கள் பிர்அவ்னிடம் பேசும் போது, ‘வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்’ (17:102) என்று கூறினார்கள். அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தவன் என்பதை பிர்அவ்ன் திட்டமாக அறிந்தவன் என்பதை நபி மூஸா அவர்கள் அவனிடமே உணர்த்தியதை மேற்படி வசனம் சுட்டிக்காட்டுகிறது.

மனித குல எதிரியான இப்லீஸ் கூட அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் ஒரே இறைவன் அல்லாஹ்தான் என்று ஏற்றுக்கொண்டிருந்ததை அல்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிடுகிறது.

‘அல்லாஹ்விடம் அவன் உரையாடிய போதெல்லாம் ‘எனது இறைவா!’ என்றே விளித்தான் (15:36இ 39).

மற்றுமோர் இடத்தில் அல்குர்ஆன் கூறுகிறது :

‘…(இப்லீஸ்) மனிதனை நோக்கி, ‘நீ (இறைவனை) நிராகரித்து விடு’ என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் ‘நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன், (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்றான். (59:16).

ஆச்சரியம் என்னவென்றால், அல்லாஹ்வை நிராகரிக்கும் நிராகரிப்பாளர்களில் பலர் அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தவன், வாழ்வாதாரம் வழங்குபவன் என்பதை ஏற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இதனால்தான் முன்னைய நபிமார்கள் அல்லாஹ்வை இறைவனாக ஏற்க மறுத்த தமது சமூகத்தாரை நோக்கி, ‘நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர்த்துவிட்டு (வேறு) எவர்களிடம் நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது’ (22:73) என்று கூறிய போது அந்த நிராகரிப்பாளர்கள் அந்தக் கருத்தை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார்கள்”. (இமாம் ஸன்ஆனி அவர்களின் கூற்று முற்றுப்பெறுகிறது).

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Check Also

அகீதா – அறுந்து போகாத வலுவான பிடிமானம் | பாடம் – 11 |

அகீதா – அறுந்து போகாத வலுவான பிடிமானம் | பாடம் – 11 | அஷ்ஷெய்க் அஜ்மல் அப்பாஸி ஜித்தா …

Leave a Reply