Home / கட்டுரை / கட்டுரைகள் / தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரம் இருக்கிறதா?| கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரம் இருக்கிறதா?| கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

தஸ்பீஹ் தொழுகை என்றால் நான்கு ரக்அத்துக்களைக் கொண்ட தொழுகையாகும். ஒவ்வொரு ரக்அத்திலும் சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாக இல்லல்லாஹு வல்லாஹு ஆக்பர் என 75 விடுத்தம் சொல்லப்படும். நான்கு ரக்அத்துக்களிலும் மொத்தமாக 300 தடவைகள் தஸ்பீஹ் சொல்லப்படுவதால் இத்தொழுகை தஸ்பீஹ் தொழுகை என அழைக்கப்படுகின்றது.

இந்தத் தொழுகை குறித்து இடம் பெற்றுள்ள ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவையா? இல்லையா? என்பது விடயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தத் தொழுகை பற்றியும் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் நிலவி வருகின்றது.

தொழும் முறையும் அதன் சிறப்பும்:

தஸ்பீஹ் தொழுகை பற்றிப் பேசும் பின்வரும் அறிவிப்புக்கள் தஸ்பீஹ் தொழுகையைத் தொழும் விதம் பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் பேசுகின்றது.

நபி(ச) அவர்கள் அப்பாஸ்(ர) அவர்களை அழைத்து, ‘என் பெரிய தந்தையே உங்களுக்கு நான் ஒரு நன்கொடையை வழங்கட்டுமா? அதை நீங்கள் செய்தால் உங்கள் பாவங்களில் முந்தியதையும், பிந்தியதையும், பழையதையும், புதியதையும், தவறுதலாச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், பெரியதையும், சிறியதையும், பகிரங்கமாகச் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் அல்லாஹ் மன்னித்துவிடுவான்.

நீங்கள் நான்கு ரக்அத்துக்கள் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் சூறதுல் பாத்திஹாவுடன் மற்றுமொரு சூறாவை ஓதி முடித்த பின்னர் நிலையில் இருந்து சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாக இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என 15 தடவைகள் கூறுங்கள். பின்னர் ருகூஃ செய்து அதில் இதை பத்து தடவைகள் சொல்லுங்கள். பின்னர் ருகூஃவிலிருந்து தலையை உயர்த்தி பத்துத் தடவைகள் சொல்லுங்கள். பின்னர் ஸஜதா செய்து சுஜூதில் பத்து தடவைகள் சொல்லுங்கள். பின்னரு சுஜூதிலிருந்து தலையை உயர்த்தி பத்து தடவைகள் சொல்லுங்கள். பின்னர் சுஜூது செய்து மீண்டும் பத்து முறை சொல்லுங்கள். பின்னர் சுஜூதிலிருந்து தலையை உயர்த்தி பத்து தடவைகள் சொல்லுங்கள். மொத்தமாக ஒரு ரக்அத்தில் 75 தடவைகள் சொல்ல வேண்டும். இவ்வாறு நான்கு ரக்அத்துக்களிலும் செய்ய வேண்டும்.

உங்களால் முடிந்தால் ஒவ்வொரு நாளும் ஒரு விடுத்தம் தொழுங்கள். முடியாவிட்டால் வாரத்தில் ஒரு முறை தொழுங்கள். அதற்கும் முடியாவிட்டால் மாதத்தில் ஒரு முறை தொழுங்கள். அதற்கும் முடியாவிட்டால் வருடத்தில் ஒரு முறை தொழுங்கள். அதற்கும் முடியாவிட்டால் உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது தொழுங்கள்” என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ர)
நூல்: இப்னு குஸைமா- 1216,
அபூதாவூத்- 1297,
இப்னுமாஜா- 1387
(குறிப்பு: இந்த அறிவிப்பு பலவீனமான தாகும். ஷெய்க் அல்பானி மற்றும் சுஅய்ப் அல் அர்னாஊத் போன்ற அறிஞர்கள் இதை ஹஸனான அறிவிப்பு என்கின்றனர்.)

இந்த அறிவிப்பு தஸ்பீஹ் தொழுகையை சிறந்ததொரு தொழுகையாகவும் இதன் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது என்றும் வாழ்நாளில் ஒரு முறையாவது இதைத் தொழ வேண்டும் என்றும் கூறுகின்றது.

இருப்பினும், இந்த ஹதீஸை ஸஹீஹானதாக ஏற்பதா? இல்லையா? என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தஸ்பீஹ் தொழுகை உண்டா? இல்லையா? என்பது குறித்து அறிஞர்களுக்கு மத்தியில் பலத்த கருத்து வேறுபாடு நிலவுகின்றது.

முதலாவது கருத்து:
முஸ்தஹப்பானது – விரும்பத்தக்கது:
தஸ்பீஹ் தொழுகை விரும்பத்தக்க ஒரு தொழுகை என்ற கருத்தை ஆரம்ப கால அறிஞர்களில் இப்னுல் முபாரக்(ரஹ்) அவர்களும் மற்றும் ஷாபி மத்ஹபுடைய சில அறிஞர்களும் கொண்டுள்ளனர். நவீனகால அறிஞர்களில் அறிஞர் அல்பானி(ரஹ்) அவர்களும் இந்த கருத்தில் உள்ளனர்.

அமாலியல் அத்கார் பீ பழ்லி ஸலாதி தஸ்பீஹ் என்கின்ற பெயரில் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்களுக்குத் தனி நூல் உண்டு. இவ்வாறே கதீப் அல் பக்தாதி (ரஹ்) அவர்களும் தஸ்பீஹ் தொழுகை பற்றி வந்துள்ள ஹதீஸ்களைத் தொகுத்து தனி நூலை எழுதியுள்ளார்கள். அதில் தஸ்பீஹ் தொழுகை பற்றி 29 அறிவிப்புக்களை அவர்கள் முன்வைத்துள்ளார்கள்.

நபி(ச) அவர்கள் தஸ்பீஹ் தொழுகை பற்றிய மேற்படி செய்தியை அப்பாஸ்(வ) அவர்களிடம் கூறியதாகவும் பழ்ல் இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், அலி இப்னு அபீதாலிப் போன்றோரிடம் கூறியதாகவும் முரண்பட்ட பல அறிவிப்புக்கள் உள்ளன.

தஸ்பீஹ் தொழுகை ஸுன்னா என்ற கருத்தில் உள்ள அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் தனது நிலைப்பாட்டைப் பின்வருமாறு விபரிக்கு கின்றார்கள்.

தஸ்பீஹ் தொழுகை பற்றி வந்துள்ள ஹதீஸ்கள் விடயத்தில் உலமாக்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். சிலர் அவற்றை மவ்லூஃ – இட்டுக்கட்டப்பட்டது என்கின்றனர். மற்றும் சிலர் ஸஹீஹ் என்கின்றனர். இந்தக் கருத்து வேறுபாட்டிற்கு அடிப்படையாக இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று, இந்தத் தொழுகை பற்றி ஆதாரமாகக் கொள்ளத்தக்க ஸஹீஹான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்ட ஒரு ஹதீஸும் வரவில்லை.

இரண்டாவதாக, இந்தத் தொழுகையின் அமைப்பு ஏனைய தொழுகையின் அமைப்புக்களை விட மாறுபட்டதாகும். இந்த வகையில் நோக்கும் போது, இது ‘ஷாத்”தாக – வழமையான தொழுகைக்கு மாற்றமாக இருக்கின்றது. தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ்களை மவ்லூஃ எனக் கூறியவர்கள் இந்த இரண்டு விடயத்தையும் அழுத்தமாக நோக்கினர்.

1. இதற்கு சரியான அறிவிப்பாளர் வரிசையுடைய ஸஹீஹான ஹதீஸ்கள் இல்லை.

2. ஹதீஸின் மதன் செய்தி சுன்னா மூலம் உறுதி செய்யப்பட்ட தொழுகை முறைக்கு மாற்றமான அமைப்பில் இந்தத் தொழுகை பற்றி விபரிக்கின்றது.

தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸை ஸஹீஹ் என்றவர்கள் அல்லது குறைந்த பட்சம் ஹஸன் என்று கூறியவர்களின் பார்வை இப்படி இருந்தது.

தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஸஹீஹான ஒரு அறிவுப்பும் இல்லை. இருப்பினும் தஸ்பீஹ் தொழுகை பற்றி பல அறிவிப்பாளர் வழிகளில் செய்திகள் வந்துள்ளன. ஹதீஸ் துறை அறிஞர்களிடத்தில் உள்ள ஒரு விதிதான், பலவீனமான ஹதீஸ் பல வழிகளில் வந்தால் அது பலம் பெறும் என்பதாகும்.

மற்றொரு கோணத்தில் நோக்கும் போது முன்னைய அறிஞர்களில் சிலர் இதை சரிகண்டிருப்பதைக் காணலாம். குறிப்பாக இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களது ஆசிரியரான அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள் இதைத் தொழுபவராகவும் அதை சரிகாண்பவராகவும் இருந்தார்கள். இவர் போன்ற அறிஞர்கள் தம்மிடம் உறுதிப்படாத ஹதீஸ்களின் அடிப்படையில் செயற்பட்டிருப்பார்கள் என்று கூறவே முடியாது.

ஒட்டுமொத்தமாக நோக்கும் போது தஸ்பீஹ் தொழுகை பற்றி ஒன்றை ஒன்று பலப்படுத்தக் கூடிய ஏராளமான வழிகளில் ஹதீஸ்கள் வந்துள்ளன. அத்துடன் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹ்) போன்றவர்கள் இதைத் தொழுதுள்ளார்கள் என்று அறியும் போது இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்று உள்ளம் அமைதி யடைகின்றது. இப்படி நோக்கும் போது ஷரீஅத்தின் அடிப்படையில் தஸ்பீஹ் தொழுகை உறுதிப்பட்டுவிடுகின்றது. அடுத்து, தஸ்பீஹ் தொழுகையின் அமைப்பு ஏனைய தொழுகையின் அமைப்புக்களை விட வித்தியாசமானது என்பதைக் காரணம் காட்டி இதை மறுக்க முடியாது. சந்திர, சூரிய கிரகணத் தொழுகைகளில் ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூஃகள் செய்யப்படும். இது ஏனைய தொழுகை அமைப்புக்கு முற்றிலும் முரண்பட்டது என்றாலும் கிரகணத் தொழுகையை உலமாக்கம் அனைவரும் அங்கீ கரித்துள்ளனர்….” சுருக்கம்.

இவ்வாறு தஸ்பீஹ் தொழுகை சுன்னா என்ற கருத்தில் உள்ள அறிஞர்கள் தனது பக்க நியாயத்தை விளக்கிச் சொல்கின்றார்கள்.

இரண்டாவது கருத்து:
தொழுவதில் பிரச்சனையில்லை:
மற்றும் சில அறிஞர்கள் தஸ்பீஹ் தொழுகை பற்றி வந்துள்ள ஹதீஸ்களை அவர்கள் பலவீனமானதாக பார்த்தாலும் அதைத் தொழுவதைப் பிழையாகப் பார்க்காமல் பரவாயில்லை என்ற கருத்தில் உள்ளனர். இவர்கள் தொழுமாறு மக்களைத் தூண்டவும் மாட்டார்கள். தொழுவதைத் தடுக்கவும் மாட்டார்கள். அமல்களின் சிறப்புக்களைக் கூற பலவீனமான ஹதீஸ்களே போதுமானது என்பதும் இவர்களது நிலைப்பாடு.
இமாம் இப்னு குதாமா அவர்கள், ‘அல் முக்னீ”யில் தஸ்பீஹ் தொழுகை பற்றிக் கூறிவிட்டு அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் இதனை விருப்பத்திற்குரியதாகக் கருதவில்லை. ஒரு மனிதர் இதைச் செய்தால் பிரச்சினையில்லை. ஏனெனில், நபிலான விடயங்கள் சிறப்புக்கள் விடயத்தில் ஹதீஸ் ஸஹீஹாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை என்று கூறுகின்றார்கள். (அல் முக்னிபாகக்: பக்- 98)

தஸ்பீஹ் தொழுகை பற்றிய இவர்களுடைய நிலைப்பாட்டை பெரிதாக விமர்சிக்கா விட்டாலும் ஹதீஸ் தொடர்பில் இந்த நிலைப் பாட்டை ஏற்க முடியாது. ஸஹீஹான ஹதீஸ் மூலம் உறுதி செய்யப்பட்ட ஒரு விடயத்தின் சிறப்பு பற்றி ஒரு ஹதீஸ் பேசுகின்றது. அந்த ஹதீஸ் பலவீன மானதாக இருந்தாலும் ஸஹீஹான ஹதீஸ் மூலம் உறுதியான விடயம் குறித்து உற்சாகமூட்ட அந்த பலவீனமான ஹதீஸைப் பயன்படுத்தலாம் என்றால் கூட ஒரு வகையில் நியாயம் உள்ளது. ஆனால், பலவீனமான ஹதீஸை அடிப்படையாக வைத்து ஒரு அமலை உருவாக்க முடியாது.

எனவே, இந்த வாதத்தை ஏற்க முடியாதுள்ளது.

மூன்றாவது கருத்து:
தஸ்பீஹ் தொழுகை மார்க்கத்தில் விதியாக்கப் பட்டதல்ல:
தஸ்பீஹ் தொழுகை பற்றி பல அறிவிப்புக்கள் வந்திருந்தாலும் அனைத்துமே பலவீனமானதாக இருந்தால் தஸ்பீஹ் தொழுகை மார்க்கத்தில் விதியாக்கப்பட்ட தொழுகை அல்ல என்பது இச்சாராரின் நிலைப்பாடாகும். உதாரணமாக, இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் இந்த நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

அவரிடம் தஸ்பீஹ் தொழுகை பற்றிக் கேட்கப்பட்ட போது, ‘என்னை அது கவரவில்லை” என்றார்கள். ஏன் எனக் கேட்கப்பட்ட போது அது குறித்து ஸஹீஹான ஒரு செய்தியும் இல்லை எனக் கூறி அதை மறுப்பது போல் கையால் சைக்கினை செய்தார்கள். (அல் முக்னீ: 2ஃ98)

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் இது பற்றிக் கூறும் போது,

‘தஸ்பீஹ் தொழுகை முஸ்தஹப்பானது என்று கூறுவதில் மாற்றுக் கருத்துள்ளது. ஏனெனில், அது பற்றி வந்துள்ள ஹதீஸ் பலவீனமானதாகும். அத்துடன் வழமையாகத் தொழப்படும் தொழுகையின் ஒழுங்குக்கும் அது முரண்பட்டதர்கும். எனவே, ஹதீஸ் இல்லாமல் இதனைச் செய்ய முடியாது. இது குறித்த ஹதீஸ் உறுதியானதல்ல” எனக் கூறுகின்றார். (அல் மஜ்மூஃ: (4ஃ54)

இவ்வாறே நவீன கால அறிஞர்களில் பலரும் தஸ்பீஹ் தொழுகையை மறுத்துள்ளனர். ஷெய்க் பின்பாஸ் (ரஹ்) மற்றும் ஷெய்க் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்) போன்றோரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஷெய்க ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்) அவர்கள் இது பற்றிக் கூறும் போது,

‘தஸ்பீஹ் தொழுகை சுன்னா அல்ல. அது பற்றி வந்துள்ள ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்பதே என்னிடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

1. இபாதத் விடயத்தில் உறுதியான ஆதாரம் வரும் வரை அதை செய்யக் கூடாது என்பதே அடிப்படையாகும். (தஸ்பீஹ் தொழுகை பற்றி உறுதியான ஹதீஸ் வரவில்லை.

2. தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ் குழப்பத்திற்குரியதாகும்.

3. (முக்கியமான) அறிஞர்கள் எவரும் இதனை விருப்பத்திற்குரியதாகக் காணவில்லை.”

இமாம் அஹ்மத் மற்றும் அவரது தோழர்கள் இதனை சரிகாணவில்லை. மறுத்துள்ளார்கள் என இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம்களான அபூ ஹனீபா, மாலிக், ஷாபி (ரஹ்) போன்றோரும் முழுமையாக இதை சரிகண்டதாக அறியப் படவில்லை.

4. இந்தத் தொழுகை மார்க்கத்தில் விதியாக்கப் பட்டிருந்தால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் சமூகததிற்கு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும். இந்த வணக்கத்தில் உள்ள நன்மைகள், ஏனைய இபாதத்துக்களில் இருந்து இது முரண்பட்டிருக்கும் விதம் என்பதால் அது பிரபல்யம் பெற்றிருக்கும். செய்வது விடயத்தில் எந்த ஒரு வணக்கத்திலும் இப்படித் தேர்ந்தெடுத்துச் செய்யும் உரிமை வழங்கப் பட்டிருப்பதாக நாம் அறியவில்லை.
ஒவ்வாரு நாளும் இல்லாவிட்டால் கிழமைக்கு ஒன்று இல்லாவிட்டால் மாதத்திற்கு ஒன்று இல்லாவிட்டால் வருடத்திற்கு ஒன்று இல்லாவிட்டால் ஆயுளில் ஒரு முறை… இப்படி ஒரு வணக்க விடயத்தில் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டதாக நாம் அறியவில்லை.

இந்த வணக்க முறை ஏனைய வணக்க முறைகளை விட வித்தியாசப்பட்டுள்ளது. இதன் பலன்களும் அதிகமாக உள்ளது. ஆனால், இது பற்றிய அறிவிப்பு பிரபலமானதாக அமையவில்லை. எடுத்துச் சொல்லப்படவும் இல்லை எனும் போது இந்த செய்திக்கு அடிப்படை இல்லை என்பது அறியப்பட்டுவிடுகின்றது.

ஏனெனில், ஒன்றின் நன்மை அதிகமாக இருந்து அதன் நடைமுறையும் வித்தியாசமாக இருந்தால் மக்கள் அதில் அதிக அக்கறை காட்டுவார்கள். ஒருவர் மற்றவருக்கு எடுத்துச் சொல்வார். அது பகிரங்கமாக மக்கள் மத்தியில் பரவும். இதெல்லாம் இந்தத் தொழுகை விடயத்தில் நடக்கவில்லை என்றால் இப்படி ஒரு தொழுகை விதியாக்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு ஷெய்க் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்) அவர்கள் தனது நிலைப்பாட்டிற்கான நியாயங்களை முன்வைக்கின்றார்கள். தஸ்பீஹ் தொழுகை தொடர்பில் இந்தக் கருத்தே மிகவும் சரியானதாகும்.

இந்த அடிப்படையில் தஸ்பீஹ் தொழுகை ஷரீஆவில் விதியாக்கப்பட்டது அல்ல என்ற நிலைப்பாட்டையே நாம் சரி காண்கின்றோம். இருப்பினும் யாராவது ஒருவர் தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ்களை ஸஹீஹானது எனக் கண்டால் அவர் அந்த ஹதீஸின் அடிப்படையில் அமல் செய்வதை நாம் தடுக்கவோ, கண்டிக்கவோ முடியாது.

அத்துடன் தஸ்பீஹ் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதற்கான ஆதாரங்களையும் காண முடியவில்லை. ரமழான் கால வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆவுக்கு முன்னர் பெண்களுக்கு தஸ்பீஹ் தொழுவித்தல், ரமழான் 27 இல் தஸ்பீஹ் தொழுவித்தல் போன்ற நடைமுறைகள் ஆதாரங்களுக்கு அப்பாற்பட்ட பித்அத்தான நடைமுறைகளாகும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

Check Also

ஃபஜ்ர் தொழுகைக்கு இத்தனை சிறப்புகளா? | Assheikh Azhar Yousuf Seelani |

ஃபஜ்ர் தொழுகைக்கு இத்தனை சிறப்புகளா? உரை: அஷ்ஷைக் அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom …

Leave a Reply