مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ ﴿٣٦﴾
(உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?) அல் கலம் – 36
நீங்கள் விரும்பிய பிரகாரம் கண்மூடித்தனமான தீர்ப்பு வழங்குவதற்கு ஏதோ கூலி கொடுக்கும் பொறுப்பு உங்களிடம் ஒப்டைக்கப்பட்டதா?.
أَمْ لَكُمْ كِتَابٌ فِيهِ تَدْرُسُونَ ﴿٣٧﴾ إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ ﴿٣٨﴾
(நிச்சயமாக நீங்கள் தேர்வு செய்வது உங்களிடம் உண்டு” என்று கூறுகிற நீங்கள் வாசிக்கிற வேதம் உங்களுக்கு இருக்கிறதா?) அல் கலம் – 37-, 38
உங்களுக்கென தனி வேதம் கொடுக்கப்பட்டு, அதில் அல்லாஹ்விற்கு வழிப்படுபவன் பாவியைப் போன்றவன் என கூறப்பட்டுள்ளதா?
أَمْ لَكُمْ أَيْمَانٌ عَلَيْنَا بَالِغَةٌ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ ۙ إِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُونَ ﴿٣٩﴾
(நிச்சயமாக நீங்கள் முடிவு செய்வது உங்களுக்கு உண்டு என நம்மிடம் செய்து கொண்ட கியாமத் நாள் வரை செல்லத்தக்க உடன்படிக்கைகள் உங்களிடம் உள்ளனவா?) அல் கலம் – 39
இணை வைப்பாளர்களே! கியாமநாள் வரை நீங்கள் விரும்பியபடி சட்டம் செலுத்தலாம். மேலும், நீங்கள் வேதனை செய்யப்படமாட்டீர்கள். விசுவாசிகளை விட சிறந்தவர்கள் என நாம் சத்தியம் செய்து உங்களுக்கு உடன்படிக்கை தந்துள்ளோமா?
நாம் நிராகரித்த நிலையில் மரணித்து மறுமை நாளில் எழுப்பப்பட்டாலும், விசுவாசிகளை விட நாமே சிறந்தவர்கள் என்பது இணை வைப்பாளர்களின் எண்ணமாகும். இவ்வாறு சிலர் கூறியதாக அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்:
(அந்த நேரம் வரும் எனவும் நான் நினைக்கவில்லை. நான் எனது இறைவனிடம் கொண்டு செல்லப்பட்டால் இதை விட சிறந்த தங்குமிடத்தையே பெறுவேன் (என்றான்)). அல் கஹ்ஃப் – 36.
(அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின் நமது அருளை அவனுக்கு நாம் சுவைக்கச் செய்தால் ‘இது எனக்குரியது. அந்த நேரம் வரும் என்று நான் நினைக்கவில்லை. என் இறைவனிடம் நான் கொண்டு செல்லப்பட்டால் அவனிடம் எனக்கு நன்மையே ஏற்படும்” எனக் கூறுகிறான். (நம்மை) மறுப்போருக்கு அவர்கள் செய்தவற்றை அறிவிப்போம். அவர்களுக்குக் கடுமையான வேதனையையும் சுவைக்கச்செய்வோம்.) ஃபுஸ்ஸிலத் – 50.