22வது படிப்பினை
பயன்தரும் முக்கியமான தகவல்களை வழங்குவதில் துரிதம் காட்டல்
{وَجِئْتُكَ} [النمل: 22] உம்மிடம் வந்தேன்
ஒரு கூட்டம் அல்லாஹ்வை வணங்காது சூரியனை வழங்குவதைக் கண்ட ஹுத்ஹுத் அதனைத் தெரிவிக்க ஸுலைமான் (அலை) அவர்களிடம் விரைந்து வந்தது.
மார்க்க சம்பந்தமான தகவல்களில் கவனம் செலுத்தி காபிருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தல் அல்லது பாவியைத் தடைசெய்தல் அல்லது குற்றவாளியைத் தண்டித்தல் போன்ற அவசியமான நடவடிக்கை எடுப்பதற்கு சக்தியும், திறமையும் உள்ளவர்களுக்கு இத்தகவல்களை விரைந்து வழங்குவதன் முக்கியத்துவத்தை ஹுத்ஹுதுடைய இச்செயற்பாடு நமக்கு உணர்த்துகின்றது.
தீனுடைய தகவல்களைப் பரிமாறுவதற்கு மகத்தான நன்மையும், நிறைவான கூலியும் கிடைப்பது மட்டுமன்றி நலவை அறிவப்பவருக்கு அதைச் செய்தவரது கூலியும் கிடைக்கும்.
அன்ஸாரி ஸஹாபி அபூ மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து எனது பயணப் பிராணி பழுதாகிவிட்டது. என்னை ஏற்றிவிடுங்கள் எனக் கூறியபோது நபியவர்கள் என்னிடம் எதுவுமில்லை. என்றார்கள். அப்பொழுது ஒரு மனிதர் யா ரஸூலல்லாஹ் அவரை ஏற்றிவிடக் கூடிய ஒருவரை அவருக்கு நான் கூறுகிறேன் என்றார். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் யார் ஒருவர் நலவைக் காட்டிக் கொடுப்பாரோ அதனைச் செய்தவரது கூலியைப் போன்றது அவருக்கும் உண்டு. (ஆதாரம்: முஸ்லிம் 3509)
மக்களுக்கு வழிகாட்டி, தீமைகளைத் தடுக்கும் விடயத்தில் எவர்களது உதவி எதிர்ப்பார்க்கப்படுமோ அவர்களிடம் தகவல்களை வழங்குவது ஒரு முஸ்லிமின் கடமையாகும். அவ்வாறே அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும் அழைப்பாளருக்கு உதவி செய்யும் தகவல்கள், அல்லது அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி அல்லது தீட்டப்படும் சதித்திட்டத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும் தகவல்களை வழங்குவதும் அவசியமாகும்.
அல்லாஹ்தஆலா பிர்அவ்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முஃமின் மூஸா (அலை) அவர்களுக்குச் செய்த உபதேசத்தை குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான். பட்டினத்தின் ஒரு கோடியிலிருந்து ஒருமனிதர் விரைந்து வந்து கூறினார்: மூஸாவே பிரதானிகள் உம்மைக் கொள்வதற்குத் திட்டம் தீட்டுகின்றனர். எனவே நீர்வெளியேறுவீராக! நான் உமக்கு விசுவாசமானவனாவேன். (அல் கஸஸ் :20)
மேற்கூறிய வசனத்தில் இடம் பெற்றிருக்கும் யஸ்ஆ என்ற வார்த்தை அவர் விரைந்து வந்து தகவல் வழங்கினார் என்பதைக் காட்டுகிறது.
தொடரும்……