بسم الله الرحمن الرحيم
_ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி
எம்மை படைப்புகளிலெல்லாம் சிறந்த படைப்பாக ஆக்கிய அல்லாஹ்வுத்தஆலா அதை விட விலை மதிக்கமுடியாத பெரிய அருட்கொடையைத் தந்து எம்மை மென்மேலும் கண்ணியப்படுத்தியிருக்கிறான்.
அதுதான் இஸ்லாம் என்கின்ற இந்த பரிசுத்த மார்க்கமாகும். அதிலுள்ள சட்டங்கள் மனிதனை புனிதமான ஒருவனாக மாற்றுவதுடன் , ஒரு மனிதன் காலையில் விழித்ததிலிருந்து இரவில் தூங்க செல்லுகின்ற வரை எவ்வாறு அவனுடைய காரியங்களை அமைத்துக் கொள்ள வேண்டுமென்பதைச் சொல்லித் தந்திருக்கின்றது.
இந்த அடிப்படையையில்தான் ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கின்ற வரை அவன் நேர்வழியில் வாழ்வது மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நேர்கோட்டை வரைந்து பின்பு அந்தக் கோட்டின் இரு பக்கங்களிலும் இன்னும் சில கோடுகளை வரைகிறார்கள். பின்பு அக்கோடுகளின் விளக்கத்தை திருமறை வசனத்தின் மூலமாக விளங்கப்படுத்துகின்றார்கள். நேராக வரையப்பட்ட கோடானது அதுதான் சத்தியப் பாதையாகும். அக்கோடுகளுக்கு குறுக்காக வரையப்பட்ட மற்றைய கோடுகள் ஷைத்தானுடைய பாதையாகும். நேரான பாதையில் சென்றால் வெற்றி காத்துக் கொண்டிருப்பதுடன் மாற்றமாக மற்றைய பாதைகளில் சென்றால் அவனை வழிகேடுகள் சூழ்ந்து கொள்ளும்.
ஆகவேதான் முஸ்லிமின் வெற்றிக்கு வழிகாட்டியாக இருப்பது அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவுமாகும். ஆனால் இன்றைய காலப்பகுதியில் கவலைக்குறிய விடயமென்னவென்றால் அநேக முஸ்லிம்கள் அல்குர்ஆன் ஸுன்னாவில் சொல்லப்பட்ட விடயங்களை எடுத்து நடப்பதை விடவும் மாற்று மத கலாசாரங்களை பின்பற்றுவதனையே விரும்புகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுமார் 1400 வருடங்களுக்கு முன்
“நிச்சயமாக நீங்கள் உங்களுக்கு முன்னிருந்தோரது வழியை சாண்சாணாகவும் முழம் முழமாகவும் பின்பற்றுவீர்கள் எதுவரைக்குமென்றால் அவர்கள் ஓர் உடும்பு பொந்தினுல் நுழைந்தாலும் நீங்களும் நுழைவீர்கள் என்று முன்னறிவிப்பு செய்த சந்தர்ப்பத்தில் ஸஹாபாக்கள் நபியவர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதரே நீங்கள் யூத கிறிஸ்தவர்களையா? குறிப்பிடுகின்றீர் என்று கேட்ட போது அவர்களல்லாமல் வேறு எவர்கள்தான் இருக்க முடியும் என்று கூறியிருக்கின்றார்களென்றால் இந்த மார்க்கம் மாற்று மத கலாசாரங்களை ஒரு போதும் விரும்பாத மார்க்கமாகும். இதே போன்று இன்னும் சில செய்திகளையும் இதனுடன் தொடர்புபடுத்தி பார்க்க முடியும்.
ஆரம்ப காலத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களது ஸஹாபாக்களும் முஹர்ரம் மாதம் 10ம் நாள் ஆஷுரா நோன்பை நோற்று வந்தார்கள். அன்றைய தினம் யூதர்களும் நோன்பு நோற்றார்கள். இது குறித்து ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறைப்பாடு செய்த போது வருகின்ற வருடம் உயிருடன் இருந்தால் ஒன்பதாவது நாளும் சேர்த்து நோற்பேன் என்று கூறினார்கள். என்றாலும் அல்லாஹ்வுடைய ஏற்பாடு அடுத்த வருடம் அந்நோன்பு வருவதற்கு முன் இறையடி சேர்ந்தார்கள்.
மேலும் விளங்குவதாக இருந்தால் இஸ்லாம் மூன்று நேரங்களில் தொழுவதை தடைசெய்திருக்கின்றது. அந்த மூன்று நேரங்களிலும் ஏன் தொழக்கூடாது என்றால் அந்த மூன்று நேரங்களிலும் சூரியனை வணங்கக் கூடியவர்கள் சூரியனை வணங்குகின்றார்கள். அவர்கள் வணங்கக்கூடிய நேரத்தில் முஸ்லிம்களுக்கு தொடர்பிருக்கக் கூடாது என்பதற்காக தொழுகையையே இம்மார்க்கம் தடைசெய்திருக்கின்றதென்றால் இம்மார்க்கம் மாற்று மத கலாசாரத்தை ஒரு போதுமே விரும்பாத மார்க்கமாகயிருக்கின்றது.
இதுவெல்லாம் இப்படியிருக்க இன்றைய காலத்தில் வாழுகின்ற சில முஸ்லிம்கள் ஒரு நடிகன் தாடியினை வளர்த்துவிட்டால் அவனைப் போன்று நாமும் தாடியினை வளர்க்கின்றோம். அவன் தாடியில் ஏதாவது அலங்காரங்களைக் கொண்டு வந்தால் நாமும் தாடியில் அலங்காரம் கொண்டு வருகின்றோம். இது போன்றுதான் ஆடை அணிவதாக இருந்தாலும், முடிவெட்டுதல், முடியினை அலங்காரப்படுத்துவதாகயிருந்தாலும் நாம் மாற்றுமதத்தவர்களுக்கு ஒப்பாகுகின்றோம். கிறிஸ்தவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்தார்கள் என ஒரு திகதியினை வைத்து கிறிஸ்மஸ் கொண்டாடுகின்றார்கள். முஸ்லிம்களாகிய எம்மில் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தார்கள் என ஒரு திகதியை நாமே ஏற்படுத்தி அதை மீலாதுன் நபி என்ற பெயரில் கொண்டாடுகின்றோமென்றால் நாமெல்லாம் எம்மை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “யார் ஒரு சமூகத்துக்கு ஒப்பாகின்றாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே” (அபூதாவூத்) என்று கூறியிருக்கின்றார்கள்.
எனவே இஸ்லாத்தை அதில் சொல்லப்படுகின்ற விடயங்கள் மூலமாகக் கடைபிடித்து வாழ்வதுடன் மாற்று மத கலாசாரங்களை பின்பற்றாமல் வாழ அல்லாஹ்வுத்தஆலா அருள்புரிவானாக..