இமாம் புஹாரியின் வாழ்க்கை முழுவதும் ஹதீஸ்களை தேடுவதிலும் அவற்றை மனனமிடுவதிலும் எழுதுவதிலும் பாதுகாப்பதிலுமே கழிந்தது, நபிகளாரின் பொன் மொழிகள் மீதுள்ள அளவு கடந்த தூய அன்பின் வெளிப்பாடே அவர் தொகுத்த “அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹுல் முஹ்தஸரு மின் உமூரி ரஸூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வஸுனனிஹீ வஅய்யாமிஹி” (ஸஹீஹுல் புஹாரியின் முழுப் பெயர்) என்ற பொக்கிஷமாகும், உலக மக்கிளைடையே அல்லாஹ் அதற்கு வழங்கிய அங்கீகாரமே அவர்களது வாழ்க்கையில் பேணப்பட்ட உளத்தூய்மைக்கு பேதிய சான்றாகும்.
இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்; ஓர் இலட்சம் ஸஹீஹான ஹதீஸ்களையும் இரண்டு இலட்சம் ஸஹீஹ் அல்லாத ஹதீஸ்களையும் மனனம் செய்துள்ளேன்.
நூல் – முகத்திமா இப்னுஸ் ஸலாஹ் – 10
இப்னுஸ் ஸலாஹ் ரஹிமஹுல்லாஹ்.
முஹம்மத் இப்னு ஹம்தவைஹி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தான் ஓர் இலட்சம் ஸஹீஹான ஹதீஸ்களையும் இரண்டு இலட்சம் ஸஹீஹல்லாத ஹதீஸ்களையும் மனனம் செய்துள்ளேன் என்று கூறியதை தாம் கேட்டதாக கூறியுள்ளார்கள்.
நூல் – முகத்திமது பத்ஹில் பாரி – 488.
ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ்,
இமாமுனா புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இரவில் உறங்கச்சென்று இடையில் கண்விழித்தால் உடனே விளக்கைப் பத்தவைத்து தமக்கு ஞாபகத்துக்கு வருகின்ற ஹதீஸ்களையும் அதன் தெளிவுகளையும் எழுதிக்கொள்வார்கள்.
இப்படியாக ஓர் இரவில் மாத்திரம் கிட்டத்தட்ட இருபது தடவைகள் விழித்தெழுந்து ஹதீஸ்களையும் அதன் தெளிவுகளையும் எழுதிக் கொள்வார்கள்.
நூல் – அல்பிதாயா வந்நிஹாயா 11/31.
இமாம் இப்னு கஸீர் அத்திமிஷ்கி ரஹிமஹுல்லாஹ்.
இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள் நான் ஸஹீஹுல் புஹாரியின் எந்த ஒரு ஹதீஸை எழுதுவதற்கு முன்பும் குளித்து சுத்தமாகி இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத் தொழுதுவிட்டே எழுதுவேன்.
நூல் – பத்ஹுல் பாரி – 1/7
ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ்.
வுழுவுடன் பல்லாயிரக்கணக்கான ரக்அத்துக்கள் நபிலான தொழுகைகள் தொழுது, தொழுது பிரார்த்தித்து எழுதப்பட்ட ஹதீஸ் தொகுப்பே ஸஹீஹுல் புஹாரியாகும்.
அமீருல் முஃமினீன் பில் ஹதீஸ் இமாமுனா புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்;
(எனது உஸ்தாத்) அலி இப்னு மதீனீ அவர்களைக் கண்டால் சிறுபிள்ளையைப் போன்று என்னை நான் அற்பமாகக் கருதிக் கொள்வேன்.
தத்கிரதுல் ஹுப்பாழ் – 2/428
இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ்.
தனது துறையில் தான் உச்சத்தில் இருந்த போதும் பெருமையற்று, சத்தியத்தில் நிலைத்திருந்த மூத்த அறிஞர்களை மதிக்கின்ற உயர்ந்த குணமே இமாமவர்களின் அறிவின் அபிவிருத்திக்கும் மக்களிடையே அவர்களுக்குள்ள நன்மதிப்புக்கும் மிகப்பெரிய காரணியாய் அமைந்தது.
இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இமாமுனா புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களது இரு கண்களுக்கும் இடையில் முத்தமிடுவார்கள், பின்பு ஆசான்களுக்கெல்லாம் ஆசானே முஹத்திஸீன்களின் தலைவரே என்னை விடுங்கள் நான் உங்கள் கால்களை முத்தமிடுகிறேன் எனக்கூறுவார்கள் என்பதாக அஹ்மத் பின் ஹம்தூன் இன்திஸார் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
நூல்கள் – அல் பிதாயா வந்நிஹாயா, தாரீஹ் பக்தாத், தாரீஹ் திமிஷ்க், தாரீஹ் நைஸாபூர்
அல்லாமா ஸஹாவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ” உம்ததுஸ் ஸாமிஃ வல் காரி பீ பவாயிதி ஸஹீஹில் புஹாரி” என்ற அழகான நூலை தொகுத்துள்ளார்கள் அந்த நூலை அல்லாமா ஜாமிஃ ரிழ்வான் ஜாமிஃ அவர்கள் தஹ்கீக் செய்துள்ளார்கள், இதனை படிப்பதன் மூலம் ஸஹீஹுல் புஹாரியின் போங்கு பற்றிய தெளிவைப் பெற முடியும்.
அல்லாமா அப்துஸ் ஸலாம் முபாரக்பூரி அவர்கள் “ஸீரதுல் இமாம் அல் புஹாரி” என்ற தமது நூலில் ஸஹீஹுல் புஹாரியின் பயன்கள், புஹாரிக்கான விரைவுரைகள் பற்றிய மேலதிக விளக்கங்களை பதிவு செய்துள்ளார்கள்.
அல்லாமா முஹம்மத் இஸாம் அரார் அல் ஹுஸைனி அவர்கள் தமது “இத்திஹாபுல் காரி பிமஃரிபதி ஜுஹூதி வஅஃமாலில் உலமா அலா ஸஹீஹில் புஹாரி” என்ற நூலில் ஸஹீஹுல் புஹாரிக்கான விரிவுரைகளில் 375 நூல்களை குறிப்பிட்டுள்ளார்கள், இதில் ஒன்றையோ இரண்டையோ முழுமையாக வாசிக்க எம்மால் முடியாவிட்டாலும் கூட இப்படி விரிவுரை நூல்களை இமாம்கள் ஏன் எழுதினார்கள் என்பதனை சிந்தித்தாவது பார்க்க வேண்டும்.
காலுக்கு மேல் காலைப் போட்டுக் கொண்டு ஏசி அறைகளுக்ககுள் மடிக்கணினியின் முன் அமர்ந்து கொண்டு கண்மூடித்தனமாக இமாம்களை விமர்சிப்பவர்கள் இந்த துறைக்காக இமாம்கள் தமது வாழ்நாட்களையே எவ்வாறு அர்ப்பணித்திருக்கிறார்கள், அவர்கள் தமது மூத்த அறிஞர்கள், முன் வாழ்ந்த நல்லோர்களை எப்படி கீர்த்திப்படுத்தியுள்ளார்கள் என்பது பற்றி கொஞ்சமாவது சிந்தித்து செயல்படுவார்களாக!
எங்களுடைய அன்புக்குரிய இமாம்கள் எல்லோரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக சுவனத்தின் உயர்ந்த பதவிகளையும் அவர்களுக்கு வழங்குவானாக!
-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி விரிவுரையாளர், அல்மனார் இஸ்லாமிய நிலையம், துபாய், அமீரகம்.