ஆதாரபூர்வமற்ற செய்திகள்
01/02
தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்
மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி
யாருடைய தொழுகை அவரை மானக்கேடான, வெறுக்கத் தக்க விடயங்களை விட்டும் தடுக்கவில்லையோ அவர் அல்லாஹ்வை விட்டும் தூரமாகுவதையே அதிகரித்துக் கொண்டிருக்கிறார்.
இது ஒரு பாதிலான செய்தியாகும். மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் ஸனது (அறிவிப்பாளர் வரிசை) மத்ன் (உள்ளடக்கம்) ஆகிய இரு விதத்திலும் ஆதாரபூர்வமானதாக இல்லை.
ஸனது ரீதியான கண்ணோட்டம் :
(1)இந்த செய்தியை நபியவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு வழியாக
இமாம் தபரானியின் அல்முஃஜமுல் கபீர் 3/106/2,
இமாம் குழாஈ உடைய முஸ்னதுஷ் ஷிஹாப் 2/43,
இமாம் இப்னு அபீஹாதம் தனது தப்ஸீரில் பதிந்துள்ளதாக கூறும் இமாம் இப்னு கஸீருடைய தப்ஸீர் 2/414,
இமாம்க்ஷஇப்னு உர்வாவுடைய அல்கவாகிபுத் தராரீ 83/2/1 ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் லைஸ் இப்னு அபீஸுலைம் என்பவர் பலவீனமானவர்.
ஹாபிழ் இப்னு ஹஜர் இவர் பற்றி கூறும் போது :
மார்க்கப் பற்றுள்ளவராக இருந்தாலும் இறுதிக் காலத்தில் நிலைகுழைந்து விட்டார். இந்நிலை ஏற்படுவதற்கு முன்னர் அறிவித்த ஹதீஸ்கள் எவை எனப் பிரித்தறியப்படாததால் அவர் ஹதீஸ் கலையில் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்கிறார்.
இமாம் ஹைஸமீ தனது “மஜ்மஉஸ் ஸவாயித் 1/134” இலும், அவரது ஆசிரியரான ஹாபிழ் இராகீ தக்ரீஜுல் இஹ்யா எனும் கிதாபிலும் இது பலவீனமானது என்று கூறியுள்ளனர்
(2)இதே செய்தி இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றாக இமாம் தபரீ உடைய “தப்ஸீர் 20/92” இல் பதிவாகியுள்ளது.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் பெயர் கூறப்படாத ஒருவர் இடம்பெற்றிருந்தாலும் இதுவே (அதாவது அவரது கூற்று என்பதே) சரியானதாகும்.
(3)இதே செய்தி இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றாக இமாம் அஹ்மதுடைய உடைய “ஸுஹ்த் 159” இலும் இமாம் தபரானி உடைய அல்முஃஜமுல் கபீரிலும் பதிவாகியுள்ளது.
ஆனால் இதன் வாசகம் “யாருடைய தொழுகை அவருக்கு நல்லதை ஏவி தீயதை தடுக்கவில்லையோ” என்று இடம் பெற்றுள்ளது.
ஹாபிழ் இராகீ கூறுவது போன்று இதன் அறிவிப்பாளர் வரிசை சரியானதாகும். இதன் படி இக்கூற்று நபியவர்களுடையதல்ல. நபித்தோழருடையது என்பது தெளிவாகிறது.
(4)”நிச்சயமாக தொழுகை வெறுக்கத் தக்க, மானக்கேடான விட்டும் தடுக்கும்” என்ற அல்குர்ஆன் வசனம் இறங்கிய போது நபியவர்கள் இதனைக் கூறியதாக ஹஸனுல் பஸ்ரி ரஹிமஹுல்லாஹ் என்ற தாபியீ கூறுகின்ற செய்தி இமாம் இப்னுல் அஃராபீ உடைய “முஃஜம் 1/193” இல் பதிவாகியிருக்கிறது.
(இந்த அறிவிப்பில் இரு குறைகள் உள்ளன. ஒன்று 🙂
இது ஒரு முர்ஸலான அறிவிப்பாகும். (அதாவது :ஒரு தாபியீ தனக்கும் நபியவர்களுக்கும் இடையில் உள்ளவரைக் குறிப்பிடாமல் நபியவர்களின் காலத்தில் நடந்த விடயமொன்றை அறிவிப்பது.
இரண்டாவது 🙂 ஹஸனுல் பஸ்ரி இடமிருந்து இதை அறிவிக்கும் இஸ்மாயீல் என்பவர் அபூமுஹம்மத் அல்பஸ்ரியாக இருந்தால் அவர் நம்பகமானவர் தான். ஆனால் அபூ இஸ்ஹாக் அல்மக்கீயாக இருந்தால் அவர் பலவீனமானவர் ஆவார்.
இமாம் குழாஈ உடைய “முஸ்னதுஷ் ஷிஹாப் 2/43” இல் பதிவாகியுள்ள முர்ஸலான செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள மிக்தாம் இப்னு தாவூத் என்பவர் நம்பகமானவரல்ல என்று இமாம் நஸாயி கூறுகின்றார்.
என்றாலும் நபியவர்கள் கூறியதாக ஹஸனுல் பஸ்ரி அறிவிக்கும் செய்தியொன்று நம்பகமான அறிவிப்பாளர் வரிசையுடன் அலீ இப்னு மஃபத் என்பவருடைய “வழிபடுதலும் மாறு செய்தலும்” என்ற கிதாபில்
இடம்பெற்றுள்ளதாக இமாம் இராகீ கூறுகின்றார்.
ஹஸனுல் பஸ்ரி வரையிலான அறிவிப்பாளர் வரிசை ஏற்கத்தக்கதாக இருந்தாலும் இது நபியவர்கள் சொன்ன ஸஹீஹான ஹதீஸாகி விடாது. ஏனென்றால் “முர்ஸல் என்பது பெரும்பாலான ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்துப்படி
பலவீனமான அறிவிப்பாகும்” என்பது ஹதீஸ் துறையில் அறியப்பட்ட ஒரு விடயமாகும்.
“ஹஸனுல் பஸ்ரி பல்துறை அறிஞராகவும், உயர் அந்தஸ்து உள்ளவராகவும், நம்பகமானவராகவும் இருந்தார். என்றாலும் அவர் முர்ஸலாக அறிவித்தவை ஆதாரமானதல்ல” என்று இமாம் இப்னு ஸஃத் கூறுகின்றார்.
தனக்கும் நபியவர்களுக்கும் இடையிலுள்ளவரை மூடலான வார்த்தையில் கூறினாலே இவரது அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை எனும் போது, இடையிலுள்ளவரை கூறாமலே இருந்தால் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?
“ஹஸன் அதிகம் இருட்டடிப்பு செய்பவராக இருந்தார். ஏதாவது ஒரு ஹதீஸை மூடலான வார்த்தையில் அறிவித்தாரானால் அது ஆதாரமாகக் கொள்ள முடியாததாகி விடுகிறது. குறிப்பாக இன்னாரிடமிருந்து அவர் கற்கவில்லை என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களுடைய பெயர் குறிப்பிடப்படும் போது இன்னும் உறுதியாகிறது.
உதாரணத்திற்கு : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹுவிடமிருந்து அவர் கற்கவில்லை என்று அறியப்பட்டதால் அவர் வழியாக வரும் அறிவிப்புகள் ஏற்கப்படுவதில்லை.” என்று இமாம் தஹபீ மீஸானுல் இஃதிதாலில் கூறுகின்றார்.
(5)இதை ஹஸனுல் பஸ்ரி உடைய கூற்றாக இமாம் அஹ்மதுடைய “ஸுஹ்த் 264” இலும், இமாம் தபரியுடைய “தப்ஸீர் 20/92” இலும் பதிவாகியிருக்கிறது. இதன் அறிவிப்பாளர் வரிசை நம்பகமானதாக இருப்பதால் இதுவே (அதாவது ஹஸனுல் பஸ்ரி உடைய கூற்று என்பதே) சரியானதாகும்.
சுருங்கக்கூறின் :
இதனை நபியவர்களோ இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுவோ கூறியதாக ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு மற்றும் ஹஸனுல் பஸ்ரி ரஹிமஹுல்லாஹ் ஆகியோருடைய கூற்று என்பது நிரூபணமாகியுள்ளது.
இமாம் இப்னு தைமிய்யா அவர்களும் தனது “அல்ஈமான் 12” இல் இந்த செய்தியை இப்னு மஸ்ஊத், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் கூற்றாக பதிந்துள்ளார்.
“இதுவே மிகச் சரியானது” என்று
இமாம் இப்னு உர்வா அல்கவாகிபுத் தராரீயில் கூறுகின்றார்.
இம்ரான் இப்னு ஹுஸைன், இப்னு அப்பாஸ், இப்னு மஸ்ஊத் ஹஸனுல் பஸ்ரி ஆகியோரின் மர்பூஆன (நபியவர்களின் கூற்றாக வந்த) அறிவிப்புகளை இமாம் இப்னு கஸீர் பதிந்து விட்டு, :
“இப்னு மஸ்ஊத், இப்னு அப்பாஸ், ஹஸனுல் பஸ்ரி, கதாதா, அஃமஷ் உட்பட இன்னும் பலரின் கூற்று தான் இது என்பதே மிகச் சரியானது” என்று குறிப்பிடுகிறார்.
இம்ரான் உடைய அறிவிப்பு 985 ஆம் இலக்கத்தில் வரவிருக்கிறது. அதில் “அவருக்கு தொழுகையே இல்லை” என்று இடம் பெற்றுள்ளது. அதுவும் மறுக்கப்பட்ட செய்தியாகும்.
மத்ன் ரீதியான கண்ணோட்டம்:
பாவம் செய்யும் ஒருவர்
ஷர்த்துகளையும் வாஜிபுகளையும் பேணித் தொழுதால் அதை மார்க்கம் அங்கீகரிக்கும் போது, அவர் செய்யும் பாவத்தினால் எவ்வாறு அல்லாஹ்வை விட்டும் தூரமாகுவார்?
இதனால் இந்த செய்தியை இமாம் இப்னு தைமிய்யா : “அல்லாஹ்விடம் நெருக்கமாக்கும் தொழுகையின் வாஜிபுகள் அனைத்தையும் தொழுபவர்
நிறைவேற்றாத பட்சத்தில் அந்தத் தொழுகை மூலம் அல்லாஹ்வின் பக்கம் நெருங்குவதற்குப் பதிலாக தூரமாகவே இருக்கிறார்” என்று வலிந்துரை செய்கிறார்
இவ்வாறான தொழுகையைத் தான் இந்த செய்தி குறிக்கிறது என்ற இவரின் இந்தக் கருத்தை ஏற்க முடியாதுள்ளது. ஏனெனில் வாஜிபுகளையும் ஷர்த்துகளையும் விட்டுத் தொழுவது தொழுகையே அல்ல. எனவே இந்த செய்தி பரிபூரணமான தொழுகையைத் தான் குறித்து நிற்கின்றது.
“நிச்சயமாக தொழுகை வெறுக்கத் தக்க, மானக்கேடான விட்டும் தடுக்கும்” என்று அல்லாஹ் கூறுகிறான்.
“ஒருவர் இரவெல்லாம் தொழுகிறார். ஆனால் பொழுது விடிந்ததும் திருடுகிறார்” என்று நபியவர்களிடம் கூறப்பட்ட போது, “அவரது தொழுகை அவரைத் தடுத்து விடும்” என்றார்கள். இந்த ஹதீஸை அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாக
முஸ்னத் அஹ்மத்,முஸ்னதுல் பஸ்ஸார்
இமாம் தஹாவியின் முஷ்கிலுல் ஆஸார் 2/430
இமாம் பغகவியின் “அலீ இப்னுல் ஜஃதின் ஹதீஸ்9/97/1
இமாம் கலாபாதீ உடைய மிப்தாஹு மஆனில் ஆஸார் 31/1/69/1 ஆகிய கிரந்தங்களில் ஆதாரபூர்வமான ஹதீஸாக பதியப்பட்டுள்ளது.
குறித்த நபர் திருட்டுக் குற்றத்தை செய்து கொண்டிருக்கும் நிலையில் நிறைவேற்றும் பரிபூரணமான தொழுகை அவரைத் திருத்தி விடும் என்று இங்கு நபியவர்கள் கூறுகின்றார்கள்.
“தொழுகையை நேரத்திற்கு பேணித் தொழுபவரை தடுக்கப்பட்டவைகளை செய்வதை விட்டும் தொழுகை தடுக்கும்” என்பதையே நபியவர்கள் நாடுகிறார்கள்.” என்று இமாம் அப்துல் ஹக் அல்இஷ்பீலி தனது “தஹஜ்ஜுத்1/24” இல் விளக்குகிறார்.
எனவே இதுவரை கூறப்பட்டதிலிருந்து இந்த செய்தி ஸனது மற்றும் மத்ன் இரு விதங்களிலும் பலவீனமானது என்பது தெளிவாகிறது.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுவுடைய அறிவிப்பை இமாம் ஜார்பர்தீ தனது தப்ஸீரில் பதிந்து விட்டு “இவ்வாறான செய்திகளை அச்சமூட்டுவதற்காக சொல்லப்பட்டது என்று எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் அது ஷர்த்தாகவோ வாஜிபாகவோ இல்லை” என்று கூறுகின்றார்.
இதை இமாம் இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் தனது “நஸீஹத் 1/32” இல் சரிகண்டு விட்டு, “தொழுகை பாவங்களைப் போக்குகிறது என்று கூறும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கும் இது முரண்படுகின்து. இவ்வாறிருக்க எப்படி (அல்லாஹ்வை விட்டும்) தூரமாக்கும்? இது அறிவுபூர்வமான விடயமல்ல. இது இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுவுடைய கூற்று என்ற வகையில் அச்சமூட்டுவதற்காக சொல்லப்பட்டது என்று எடுத்துக் கொள்ளலாமே அல்லாமல் நபியவர்களின் கூற்றாக இதைக் கருதுவது சாத்தியமற்றதாகும்.
இதற்கு ஸஹீஹுல் புகாரியில் இடம்பெறும் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக இருக்கிறது :
“ஒரு பெண்ணை முத்தமிட்ட ஒருவர் நபியவர்களிடம் முறைப்பட்ட போது “நிச்சயமாக நன்மைகள் பாவங்களை அழித்து விடுகின்றன” என்று அல்லாஹ் வசனத்தை இறக்கினான்.”
இமாம் இப்னு தைமிய்யா “இந்த செய்தி நபியவர்கள் சொன்னதாக ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. அல்லாஹ் கூறுவது போன்று தொழுகை வெறுக்கத் தக்க மானக் கேடான விடயங்களை விட்டும் தடுக்கும். ஒரு போதும் தொழுகை அல்லாஹ்வை விட்டும் தூரமாக்காது. தொழுபவன் பாவியாக இருந்தாலும் தொழாதிருப்பவனை விட சிறந்தவனாகவும் அவனை விட அல்லாஹ்விடம் நெருக்கமானவனாகவும் இருக்கிறான்” என்று தனது பதாவாவில் கூறுகின்றார்.
இந்த செய்தி கருத்து ரீதியாகவும் பலவீனமானது என்பதையே அவரது பேச்சு உணர்த்துகிறது. அதுவே உண்மையுமாகும்.
“இது பொய்யான செய்தி” என்று இமாம் இப்னுல் ஜுனைத் கூறியதாக இமாம் தஹபீ “மீஸானுல் இஃதிதால் 3/293” இல் எடுத்தெழுதியுள்ளார்…
இன்ஷா அல்லாஹ் தொடரும்….