بسم الله الرحمن الرحيم
11. அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் இல்லாத பெயர்களையும் பண்புகளையும் அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்தலாமா?
விடை: அவ்வாறு உறுதிப்படுத்த முடியாது. ஏனெனில், அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை குர்ஆனிலிருந்தோ அல்லது ஸுன்னாவிலிருந்தோ அன்றி எடுக்க முடியாது. அவ்வாறு இல்லாத பெயர்களை நாம் உறுதிப்படுத்தினால் அல்லாஹ் கூறாத ஒன்றைக்கூறிய பாவத்தில் நாம் ஆகிவிடுவோம். உமக்கு எது விடயத்தில் அறிவு இல்லையோ அதை நீ பின்பற்றாதே என அல்லாஹுத்தஆலா கூறுகிறான்.
– அல்இஸ்ரா: 36
12. தத்துவவியலாளர்கள் கூறுவதுபோல் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் அதிகமாக உள்ளதால் பல இறைவன்கள் உள்ளார்கள் என்று கூறலாமா?
விடை: அல்லாஹ்வுக்கு கேட்கக்கூடியவன், பார்க்கக்கூடியவன், ஆற்றலுடையவன், மன்னிக்கக்கூடியவன் என பல பெயர்கள் உள்ளன. ஆனால், இதன் மூலம் பல இறைவன்கள் உள்ளதாகக் கூறமுடியாது. ஒருவனுக்கு பல பண்புகள் இருக்கலாம். உதாரணமாக: முஹம்மத் திறமையானவன், கெட்டிக்காரன், அறிவுள்ளவன், பண்புள்ளவன் என நாம் கூறினால் இது பலரைக் குறிக்காது. மாறாக, இது ஒருவரையே குறிக்கும். அதேபோல் அல்லாஹ்வுக்கு பல பெயர்கள், பண்புகள் இருப்பதால் பல இறைவன்கள் உள்ளதாகக் கூறமுடியாது.
13. அல்லாஹ்வின் பண்புகள் படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாகுமா?
விடை: நிச்சயமாக அவ்வாறு ஒப்பாக முடியாது. இது விடயத்தில் இரு சாரார் வழிகெட்டுள்ளனர்.
முதல் சாரார்: முமஸ்ஸிலாக்கள் ஆவார்கள். இவர்கள் அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக்கினார்கள்.
இரண்டாவது சாரார்: முஅத்திலாக்கள் ஆவார்கள். அல்லாஹ்வுக்குப் பண்புகளை நாம் உறுதிப்படுத்தினால் அப்பண்புகள் படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாகிவிடும் என்ற காரணத்தால் அல்லாஹ்வுக்கு எந்தப் பண்பையும் இவர்கள் உறுதிப்படுத்தவில்லை.
இவர்கள் அனைவருக்கும் பின்வருமாறு மறுப்பளிக்கலாம். அல்லாஹ்வையும் அவனால் படைக்கப்பட்ட எங்களையும் எவ்வாறு ஒப்பாக்க முடியும்? என நாம் முதலில் அவர்களிடம் கேள்வி எழுப்புகிறோம். ஏனென்றால், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவனைப்போல் எந்த ஒன்றும் இல்லை. அவன் கேட்கக்கூடியவன், பார்க்கக்கூடியவன் என அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். அல்லாஹ்வைப்போல் இந்த உலகில் எந்த ஒன்றும் இல்லை என்பதை இவ்வசனம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இதுவே அவர்களுக்கு முதல் மறுப்பாகும்.
அல்லாஹ் கேட்கின்றான், பார்க்கின்றான், பேசுகின்றான். ஆனால் நாம் கேட்பதைப்போல் கேட்பதில்லை. நாம் பார்ப்பதைப்போல் பார்ப்பதில்லை. நாம் பேசுவதைப்போல் பேசுவதில்லை.
அதேபோல் அல்லாஹ்வுக்கு கண், கை, முகம், விரல், போன்றவைகள் இருப்பதாகக் குர்ஆனும் சுன்னாவும் பேசுகின்றன. ஆனால் எங்களுடைய கண், கை, முகம்,விரல்கள் போல் அவைகள் இல்லை.
மேலும், அல்லாஹ் கேட்கின்றானா? பார்க்கின்றானா? பேசுகின்றானா? என யாராவது கேட்டால் உடனடியாக ஆம் எனக்கூறிவிட்டு மௌனமாக இருப்பது சிறந்ததல்ல. மாறாக, எங்களைப் போல் கேட்பதில்லை, பார்ப்பதில்லை, பேசுவதில்லை. அது எவ்வாறு இருக்கும் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது எனவும் கூறவேண்டும்.
உதாரணமாக: எங்களுக்கும் கால்கள் உள்ளன. யானைக்கும் கால்கள் உள்ளன. நுளம்பிற்கும் கால்கள் உள்ளன. ஆனால் இம்மூன்று வகையினரினதும் கால்கள் ஒரேமாதிரியாகும் என யாருக்குத்தான் கூறமுடியும்? எமது கால்கள் எமக்குத் தகுந்தவாறும் யானையுடைய கால்கள் அதற்குத் தகுந்தவாறும் உள்ளன. படைப்பினங்களுக்கு மத்தியிலேயே இந்த வித்தியாசம் என்றால் படைத்த இறைவனுக்கும் படைப்பினங்களுக்கு மத்தியில் இந்த வித்தியாசம் இருக்கக்கூடாதா?
அதேபோல் அல்லாஹ்வுக்கும் கை உண்டு, எமக்கும் கைகள் உள்ளன. ஆனால், எமது கைகளும் அவனுடைய கைகளும் ஒரேமாதிரி எனக்கூறமுடியாது.
14. அல்லாஹ்வுடைய ஒவ்வொரு பண்பையும் நாம் எவ்வாறு அணுக வேண்டும்?
விடை: ஒவ்வொரு பண்பையும் நாம் மூன்று அடிப்படையில் அணுக வேண்டும்.
முதலாவாது: அல்இஸ்பாத் – உறுதிப்படுத்தல் – அதாவது அல்லாஹ்வுடைய பண்பை அறிவிக்கும் சொல்லை உறுதிப்படுத்த வேண்டும்.
இரண்டாவது: அல்இக்ரார் – ஏற்றுக்கொள்ளல் – அதாவது அப்பண்பின் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மூன்றாவது: அல்இம்ரார் – முறைகற்பிக்காமல் இருக்க வேண்டும் – அதாவது அப்பண்புகளை முறைகற்பிக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உதாரணம்: அல்லாஹ்வுக்கு பார்க்கக்கூடியவன் என்ற பெயர் உண்டு. அதை நாம் பின்வருமாறு மூன்று வகையில் அணுகலாம்.
முதலாவது: பசீர் – பார்க்கக்கூடியவன் – என்ற பெயரை அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.
இரண்டாவது: பார்க்கக்கூடியவன் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மூன்றாவது: அல்லாஹ்வின் பார்வை இன்னாரின் பார்வையைப்போல் என்று முறைகற்பிக்கக்கூடாது. அதன் முறை அல்லாஹ்வுக்கு மாத்திரமே தெரியும் என நம்ப வேண்டும்.
15. உறுதிப்படுத்தல் என்ற அடிப்படையில் அல்லாஹ்வின் பண்புகள் எத்தனை வகைப்படும்?
விடை: உறுதிப்படுத்தல் என்ற அடிப்படையில் அல்லாஹ்வின் பண்புகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. பூரணமான பண்புகள்: இப்பண்புகளில் எந்தவிதக் குறையும் காணப்படமாட்டாது. அல்லாஹ்வை இவ்வாறான பூரணமான பண்புகளால் எந்தவிதக் குறிப்பாக்கலுமின்றி பொதுவாகவே வர்ணிக்கலாம். உதாரணம்: யாவற்றையும் அறிந்தவன், சக்திமிக்கவன், பார்ப்பவன், கேட்பவன், இரக்கமுடையவன்.
2. குறையை அறிவிக்கக்கூடிய பண்புகள்: அதில் எந்தவிதப் பூரணமும் இருக்காது. இவ்வாறான பண்புகளைக் கொண்டு அல்லாஹ்வை ஒருபோதும் வர்ணிப்பது கூடாது. உதாரணம்: தூக்கம், இயலாமை, அநியாயம், மோசடி.
3. பூரணமாகவும் குறையுள்ளதாகவும் உபயோகிக்கப்படும் பண்புகள்: ஒவ்வோர் இடத்திற்கேற்ப அப்பண்புகள் பூரணத்தையோ அல்லது குறையையோ அறிவிக்கும். எனவே, இவ்வாறான பண்புகளைக் கொண்டு பொதுவாகவே அல்லாஹ்வை வர்ணிப்பது கூடாது. இன்னும், பொதுவாகவே அல்லாஹ்வுக்கு இவ்வாறான பண்புகள் இல்லை என்றும் கூற முடியாது. உதாரணம்: சூழ்ச்சி செய்பவன், ஏமாற்றுபவன், பரிகாசம் செய்பவன். இவ்வாறான பண்புகளை உடையவனாக அல்லாஹ் இருக்கின்றான் என்று பொதுவாகக் கூறவும் முடியாது. இவ்வாறான பண்புகள் அல்லாஹ்வுக்கு இல்லை எனவும் கூறமுடியாது. அல்லாஹ் அவனுடைய எதிரிகளாகிய காபிர்கள், நயவஞ்சகர்கள் போன்றவர்களுக்கு சூழ்ச்சி செய்வது, அவர்களை ஏமாற்றுவது, அவர்களுடன் பரிகாசம் செய்வது அல்லாஹ்வுடைய பூரண பண்பை அறிவிக்கக்கூடியதாகும். விசுவாசிகளுக்கு அல்லாஹ் சூழ்ச்சி செய்வது, அவர்களை ஏமாற்றுவது, அவர்களுடன் பரிகாசம் செய்வது அல்லாஹ்வுக்கு இல்லாத பண்பை அறிவிக்கக்கூடியதாகும். ஏனென்றால், அல்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் அவன் காபிர்களுக்கு சூழ்ச்சி செய்ததாகவும், நயவஞ்சகர்களை ஏமாற்றியதாகவும், அவர்களுடன் பரிகாசம் செய்கின்றான் என்பதாகவும் கூறியிருக்கின்றான்.
16. அல்லாஹ்வுக்கு தூக்கமும் இயலாமையும் ஏற்படாது என்பதற்கு ஆதாரம் என்ன?
விடை: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவனை சிறு துயிலும் உறக்கமும் பீடிக்காது.
– அல்பகறா: 255
மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: இன்னும், திட்டமாக வானங்களையும் பூமியையும் அவை இரண்டிற்கு மத்தியில் உள்ளவைகளையும் ஆறு நாட்களில் நாம் படைத்தோம். – அதனால் – எவ்வித களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.
– காப்: 38
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
..