-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி
எம்மை எல்லாம் படைத்த ரப்புல் ஆலமீன் எப்படியாவது சத்தியத்தை பாதுகாப்பதாக வாக்களித்திருக்கிறான். அந்தடிப்படையில் தான் காலத்துக்குக் காலம் நபிமார்களையும் ரஸூல்மார்களையும் மக்களுக்கு அனுப்பி சத்தியத்தை உண்மையான முறையில் எத்திவைத்தான்.
நபியவர்களது தூதுத்துவப் பணிக்குப் பின் எந்த நபியோ ரஸூலோ வரமாட்டார்கள் என்று இம்மார்க்கம் சொன்னதன் பிரகாரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்துக்குப் பின் சத்தியத்தை உலமாக்களை வைத்து அல்லாஹ் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தான்.
ஆனால் கவலைக்குறிய விடயம் என்னவென்றால் இஸ்லாத்தை மக்களுக்கு சரியாக சொல்லப்படுவதை விரும்பாத சிலர் சத்தியத்தை பிரச்சாரம் செய்யக்கூடிய மக்களை எதிர்க்க வேண்டும், அவர்களைப் பற்றி மக்களிடத்தில் இருக்கின்ற நல்லெண்ணங்களை இல்லாதொழித்து அவர்களது அழைப்புப் பணியை முடக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் செய்தனர்.
அந்தடிப்படையில் அல்லாஹ்வை வணங்குகின்றோம் என்று சொல்லிக் கொண்டு அல்லாஹ்வுடன் சேர்த்து கப்றுகளையும் வணங்கக்கூடிய சில விஷமிகள் சத்தியத்துக்காக போராடிய இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் றஹிமஹுல்லாஹு அவர்களை எதிர்க்க ஆரம்பித்தார்கள்.
முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என்றால் யார்:
இமாமவர்களின் முழுப் பெயர்:-
முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் இப்னு ஸுலைமான் இப்னு அலி இப்னு முஹம்மது இப்னு அஹ்மத் அத்தமீமி என்பதாகும்.
பிறப்பு:-
இமாமவர்கள் ஹி.1115ல் நஜ்தில் உள்ள உயைனா என்ற இடத்தில் பிறந்தார்கள்.
இமாமவர்கள் கற்ற இடங்கள்:-
இமாமவர்கள் கல்வியினை தன்னுடைய தந்தையிடமிருந்து பெற்றதுடன் பஸரா ஹிஜாஸ் போன்ற இடங்களுக்கும் சென்று மார்க்க அறிவைப் பெற்றுக் கொண்டார்கள்.
இமாமவர்களின் ஆசிரியர்கள்:-
இமாமவர்கள் அஷ்ஷெய்க் முஹம்மத் ஹயாத் அஸ்ஸீன்தீ, இஸ்மாயில் அல் அஜ்லூனி, அலி, அப்துல்லாஹ் இப்னு நஜ்தி போன்றோரும் இவர்களல்லாத இன்னும் சில இமாம்களிடம் மார்க்க அறிவைப் பெற்றுக் கொண்டார்கள்.
இவர் எழுதிய நூல்கள்:-
இமாமவர்கள் பின்வரும் நூல்களை தொகுத்திருக்கிறார்கள்
கஷ்பஷ் ஷுப்ஹாத்.
கிதாபுத் தவ்ஹீத்.
கிதாபு உஸூலுல் ஈமான்.
கிதாபு பழாஇலுல் குர்ஆன்.
இவையெல்லாத இன்னும் அதிகமான நூல்களைத் தொகுத்திருக்கிறார்கள்.
மரணம்:-
இப்படிப்பட்ட இமாமவர்கள் ஹி.1206ல் இறையடி சேர்ந்தார்கள்.
வழிகேடர்கள் ஏன் இமாமவர்களை எதிர்க்க வேண்டும்?
இமாமவர்கள் பிறந்த காலத்தில் மக்களெல்லாம் வழிகேட்டின் உச்சகட்டத்தில் இருந்து கொண்டிருந்தார்கள். அம்மக்களில் படித்தவராக இருந்தாலும் படிக்காத பாமர மக்களாக இருந்தாலும் எல்லோருமே வழிகேட்டில் இருந்து கொண்டிருந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் தான் சத்தியத்தைப் பாதுகாக்க இமாமவர்கள் கடுமையான முறையில் போராடினார்கள். இதனால் பலரதும் எதிர்ப்புக்கு உள்ளானார்கள். இமாமவர்களது அழைப்புப் பணியை விரும்பாத சில வழிகேடர்களின் தலைவர்கள் இமாமவர்களை மக்களுக்கு முன்னால் ஒரு வழிகேடன் என்று பிரசுரிக்க வேண்டுமென்பதற்காக நபியவர்கள் ஈரான் ஈராக் பகுதியிலுள்ள நஜ்த் என்ற இடத்தில் ஷைத்தானின் கொம்பு தோன்றும் என்ற ஹதீஸை வைத்து இமாமவர்கள்தான் அந்த ஷைத்தானின் கொம்பு என்று சித்தரித்ததுடன் இத்தூய அகீதாவினை பின்பற்றுவோரை வஹ்ஹாபிகள் என்று கூறத் தொடங்கினர்.
ஆனால் இமாமவர்கள் சவுதியில் உள்ள நஜ்த் என்றயிடத்தில் தான் பிறந்தார்களே தவிர நபிகளார் கூறிய நஜ்தில் அல்ல. நபியவர்கள் கூறிய நஜ்த் ஈரான் ஈராக் பகுதியில் இருப்பதை தெரியாதவர்களாக இவ்வழிகேடர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர்.
எனவே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் உண்மையில் இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் றஹிமஹுல்லாஹு அசத்தியத்தை ஒழிக்க முயற்சித்தார்களே தவிர சத்தியத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. எனவே யாரெல்லாம் சத்தியத்தைப் பின்பற்றுவோரை வஹ்ஹாபிகள் என்று கூறி அவர்களை தூற்றுவார்களோ நிச்சயமாக அவர்கள் இமாமவர்கள் செய்த அழைப்புப் பணியான இந்த சத்தியத்தை எதிர்ப்பவர்களாகக் காணப்படுவர்.
எனவே இவ்வழிகேடர்களின் தீங்குகளிலிருந்து எம்மனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பதுடன் எம்மை சத்தியத்தை எடுத்து நடப்பவர்களாகவும் ஆக்கி அருள்புரிவானாக…