Home / அறிவுரைகள் / அலங்காரமாக மாற்றப்பட்ட தவறான விடயங்கள்…

அலங்காரமாக மாற்றப்பட்ட தவறான விடயங்கள்…

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி

இந்த மார்க்கம் மனித வாழ்க்கைகுறிய அத்தனை விடயங்களையும் தெளிவுபடுத்துவதாக இருந்து கொண்டிருக்கின்றது. இதில் சொல்லப்படுகின்ற ஒவ்வொரு விடயங்களும் மனிதனை புனிதனாக மாற்றக்கூடியதாக இருக்கிறது. ஆனால் கவலைக்குறிய விடயம் என்னவென்றால் மார்க்கம் சொல்லித் தந்த விடயங்கள் மனிதனை தூய்மையானவனாக மாற்றக்கூடியதாக இருந்தும் அதற்கு முரணாக நடப்பது தான் அலங்காரமான விடயங்களாக பார்க்கப்படுகின்றது. அந்தடிப்படையில் சில விடயங்களை சுட்டிக்காட்டலாமென நினைக்கிறேன்.

நகங்களை நீளமாக வளர விடுதல்:

இஸ்லாம் 40 நாட்களுக்கு ஒருமுறையாவது நகங்களை வெட்டிக் கொள்ள வேண்டுமென்று ஒரு வழிகாட்டலை சொல்லித் தந்திருக்கின்றது. இதன் மூலம் மனிதன் உலகிலும் ஆரோக்கியமானவனாக வாழ்வதுடன் அல்லாஹ்வுடையதும் அவனுடைய தூதருடைய வழிகாட்டல்களையும் கடைபிடித்து வாழ்ந்ததனால் மறுமையில் கூலியையும் பெற்றுக் கொள்கிறான்.

ஆனால் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் எந்தவொரு வித்தியாசமுமின்றி ஒரு சிலர் நகங்களை நீளமாக வளர்த்து அதனை அழகுக்குறிய காரியமாக பார்த்து வருகின்றார்கள்.

ஆகவே அழகு ஆரோக்கியமாக என்று இஸ்லாம் ஒன்றை சொல்லித் தந்திருக்கும் போது அதற்கு மாற்றமானதையே அலங்காரமாக மாற்றியிருக்கிறார்கள்.

தாடியினை கத்தரித்தல் அல்லது அதில் கை விளையாடல்களை செய்தல்:

எமக்கு சிறந்த முன்மாதிரியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம்களில் சிலர் தங்களுடைய முன்மாதிரியாக ஒவ்வொரு விதமான நடிக நடிகைகளையும், விளையாட்டு வீரர்களையும் எடுத்து அவர்கள் செய்கிற விடயங்களையும் செய்வதையே விரும்புகிறார்கள். அந்தடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்கின்ற போதே பின்வருமாறு கூறினார்கள்

“நீங்கள் மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியினை வளர விடுங்கள். நெருப்பு வணங்கிகளுக்கு மாறு செய்யுங்கள்”
(புஹாரி முஸ்லிம்)

இந்த நபிமொழியில் இருந்து மூன்று விதமான செய்திகளைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

* மீசையை கத்தரிக்க
வேண்டும்.

*தாடியினை வளர விட வேண்டும்.

*நெருப்பு வணங்கிகளுக்கு மாறு செய்ய வேண்டும்.

இந்த மூன்று விதமான விடயங்களையும் சுருக்கமாக அவதானிக்கின்ற போது மீசையை வளர விட்டு தாடியினை கத்தரிப்பதானது நெருப்பு வணங்கிகளின் செயலாகும். ஆகவே பிறமதம் செய்யக்கூடிய காரியத்தை இந்த மார்க்கம் இதில் நுழைவிப்பதை ஒரு போதும் விரும்பாததாக இருந்து கொண்டிருக்கின்றது.

“யார் ஒரு சமூகத்துக்கு ஒப்பாகின்றாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே” (அபூதாவூத்)
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இதுவெல்லாம் இப்படியிருக்க சில இளைஞர்கள் தாடியினை கத்தரிப்பதுதான் அழகு எனக் கருதி தாடியினை முழுமையாக கத்தரிப்பவர்களாகும் இன்னும் சிலர் ஏதாவது நடிகன் தாடியில் அலங்காரங்களை கொண்டு வந்தால் அவனைப் பார்த்து இவர்களும் தாடியில் கை விளையாடல்களை செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

ஆகவே இஸ்லாம் அழகு என்று ஒன்றை சொல்லித் தந்திருக்கும் போது அவைகளை எடுத்து நடக்காமல் அதற்கு மாற்றமாக நடப்பது தான் அழகு என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிவது:

ஏதாவது நிகழ்வுகளுக்கு பெண்கள் அழைக்கப்பட்டு அங்கு அவர்கள் சமூகளிக்கின்ற காட்சிகளைப் பார்க்கின்ற போது உண்மையில் இவர்கள் அல்லாஹ்வைப் பயந்தவர்களா என்று சிந்திக்க வேண்டியதாக உள்ளது. அந்தளவுக்கு அழுகு என்ற பெயரில் இறுக்கமான ஆடைகளை அணிவதையே முஸ்லிம்கள் பெண்கள் விரும்பக்கூடியவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

யார் ஒரு பெண், மற்றயவர்களை கவர வேண்டுமென்பதற்காக வாசனை திரவியங்களை பூசிக் கொண்டு விதியில் செல்கிறாராளோ அவள் விபச்சாரி

என்று வாசனை திரவியங்களை பூசுவதையே கூறியிருக்கின்றார்கள் என்றால் அடுத்தவர்களை கவர வேண்டுமென்பதற்காக இறுக்கமான ஆடைகளை அணிகின்றார்களே அவ்வாறு செய்யக்கூடிய ஒவ்வொரு பெண்களும் அல்லாஹ்வை அஞ்சி அவனிடம் தவ்பா செய்து கொள்ள வேண்டும். அற்ப இன்பங்களை அடைந்து கொள்ள வேண்டுமென்பதற்காக மறுமை வாழ்வை இழந்து விடக்கூடாது. மறுமையில் அல்லாஹ்வுடைய தண்டனையைப் பெற்றுத் தரக்கூடியதாக இறுக்கமான ஆடையை அணிவது இருந்து கொண்டிருக்கின்றது. உலகத்தில் அடுத்தவர்களை கவர வேண்டுமென்று நினைத்தால் அதனை அடைந்து கொள்ள முடியும். ஆனால் இந்த இன்பம் கிடைத்து அடுத்த மணி நேரமும் மரணம் ஏற்பட்டு முடிந்தும் விடலாம்.

எனவே அல்லாஹ்வைப் பயந்து யாரெல்லாம் இறுக்கமான ஆடைகளை அணிவதை அலங்காரமாக கருதுகிறார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் தவ்பா செய்து கொள்ள வேண்டும்.

வலிமா விருந்தில் கெளரவத்துக்காக ஏழைகள் புறக்கணிப்படல்:

திருமணம் செய்து கொண்ட ஆண் வலிமா கொடுமாறு இஸ்லாம் சொல்லித் தந்திருப்பதுடன் யாரை அதற்கு அழைக்க வேண்டும் என்ற வழிகாட்டலையும் கூடவே கற்றுத் தந்திருக்கிறது.

“ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு செல்வந்தர்கள் மாத்திரம் அழைக்கப்படும் வலிமா விருந்துதான் விருந்துகளில் மோசமான விருந்தாகும்.
(புஹாரி முஸ்லிம்)
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகிய வார்த்தைகளை கற்றுத்தந்திருக்கிறார்கள்.

ஆனால் கவலைக்குறிய விடயம் செல்வந்த இடங்களில் ஏதாவது திருமணங்கள் நடைபெறுகின்ற போது அங்கு வலிமாக்களுக்கு அழைக்கப்படுகின்ற மக்களெல்லாம் செல்வந்தர்களாகவே காணப்படுகின்றார்கள்.

ஏழைகள் தங்களுடைய வலிமாக்களுக்கு சமூகமளித்தால் மற்றைய செல்வந்த நண்பர்கள் தன்னை மோசமான பார்வையில் பார்ப்பார்கள் அல்லது தன்னுடைய கெளரவத்துக்கு ஏதாவது பங்கம் விளைவித்து விடும் எனக் கருதி ஏழைகளை புறக்கணக்க்கிறார்கள். இத்தகைய செல்வந்தர்கள் ஏழைகளை மாத்திரம் புறக்கணிக்கவில்லை இவர்கள் நபியவர்களுடைய சுன்னாவையும்தான் சேர்த்து புறக்கணிக்கின்றனர். இவர்கள் மற்றையவர்களுக்கு மோசமான உணவையே வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே சமூகத்தில் அந்தஸ்து மரியாதை கிடைக்க வேண்டுமென்பதற்காக நபியினுடைய சுன்னா தெளிவாக புறக்கணிக்கப்படுகின்றது.

இது போன்று பல விடயங்களையும் கூறமுடியும். விரிவை அஞ்சி அவ்விடயங்களை மாத்திரம் கூறலாமென நினைக்கிறேன்.

▪பெண்கள் ஒட்டக திமில்களைப் போன்று முடிகளைக் கட்டுதல்.

▪மது போதைகளைப் பயன்படுத்தல்.

▪வீண்கேளிக்கை இடம்பெறக்கூடிய இடங்களுக்கு செல்லுதல்.

▪பெண் பிள்ளைகளை அநாச்சாரம் நடக்கக்கூடிய இடங்களுக்கு அழைத்துச் செல்லல்.

▪வணக்கம் செய்யக்கூடிய மக்களை பரிகாசம் செய்தல்.

இப்படி ஏராளமான விடயங்களை அடுக்கிக்
கொண்டு செல்ல முடியும்.

எனவே எவையெல்லாம் இம்மார்க்கம் தடைசெய்திருந்து அவைகள் அலங்காரம் என்ற பெயரில் செய்யப்படுகின்றதோ அவைகளிலிருந்து அல்லாஹ் எம்ஒவ்வொருவரையும் பாதுகாப்பானாக…

Check Also

பிள்ளைகளுக்கு பெற்றோர் செய்யும் கடமைகள்

பிள்ளைகளுக்கு பெற்றோர் செய்யும் கடமைகள் அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) தேதி : 26 – 11 – 2020 …

Leave a Reply