நபி (ஸல்) அவர்கள், ‘என் உம்மத்தினர் 73 கூட்டத்தினராக பிரிவார்கள் அவர்களில் ஒரு கூட்டத்தினரைத் தவிர, மற்ற ஏனைய அனைவரும் நரகம் செல்வர். அவர்கள்தான் இக்கூட்டத்தைச் சார்ந்தோர்’ என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் (ஸல்) இன்று நானும் எனது சஹாபாக்களும் இருக்கின்ற இந்தக் கொள்கையைப் பின்பற்றி நடப்பவர்கள் என்று பதிலளித்தார்கள். (அபூ ஹுரைரா (ரழி) நூல்: திர்மிதி)
கலீபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சிகாலம் வரை மார்க்க விஷயங்கள் அனைத்தும் (பிரச்சினைகள் இன்றி) மிகச் சிறப்பான நிலையில் இருந்தன. இதே போன்று கலீபா உஸ்மான் (ரழி) அவர்களது ஆட்சிகாலத்திலும் காணப்பட்டது. எனினும் அவர்கள் கொலை செய்யப்பட்ட பின்னர் கருத்து முரண்பாடுகளும், நூதன அனுஸ்டானங்களும் (அதாவது கொள்கையில் பித்அத்துக்களும்) தோன்றின. அதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிளவுகள் ஏற்பட்டன. இந்த நிலையிலும் சத்தியத்தில் நிலைதிருந்தவர்கள் இருக்கவே செய்தனர். இவர்கள் சத்தியத்தின்படி செயல்பட்டுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் சத்தியத்தை எடுத்துக்கூறி, அதன்பால் மக்களை அழைப்பவராகவும் காணப்பட்டனர். அப்பாசியரின் ஆட்சிகாலம் வரை மார்க்கத்தின் நிலை சீராகவே காணப்பட்டது.
காலம் உருண்டோட, அதற்கேற்ப மக்களும் மாறிவிட்டனர். அதனைத் தொடர்ந்து நிலைமைகள் மிகவும் மோசமடைந்தது பித்அத்துக்கள் மலிய ஆரம்பித்தன. அத்துடன் அசத்தியத்தின் பக்கமும், பிரிவினைகளின் பக்கமும் மக்களை அழைக்கின்ற அழைப்பாளர்கள் அதிகரித்தனர், இதன் காரணத்தால் எல்லா விஷயங்களும் சோதனைக்கும், குழப்பத்துக்கும் உள்ளாகின. இறைத்தூதரும் (ஸல்), சஹாபாக்களும் காட்டிதராத விஷயங்களை அனைவரும் பேச ஆரம்பித்ததுடன், நபி (ஸல்) அவர்கள் தடைசெய்த பிரிவினைகளின் பக்கம் மக்களை அழைக்கவும் ஆரம்பித்தனர். ஒவ்வொருவரும் தாம் கொண்ட கருத்தின்பக்கம் மக்களை அழைக்கவும், தமது கருத்தை மறுப்பவர்களை காபிஃர் என்று கூறவும் தொடங்கினர். இதன் விளைவு ஒருவர் மற்றவரை சர்வசாதாரமாக (காபிஃர் என்று கூறுகின்ற நிலை) உருவானது.இதனால் மார்க்க அறிவில்லாதவர்களும், பாமரர்களும், தெளிவில்லாதவர்களும் வழி தவறினார்கள்.
இவ்வாறு வழிகெட்ட பிரிவினர்களால் சில பொதுமக்கள் உலக ஆசை ஊட்டப்பட்டனர் மேலும் சிலர் வழிகெட்ட ஆட்சியாளர்களின் மிரட்டலுக்கு ஆளாகினர். இவ்வாறு உலக ஆசைகளால் கவரப்பட்டவர்களும், ஆட்சியாளர்களின் மிரட்டலுக்கு அஞ்சியவர்களும் (கொள்கையில்) வழிகெட்ட பிரிவினரை பின்பற்றி வழி தவறினார்கள். இதன் காரணத்தால் நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரிகளும், நபி வழியை பின் பற்றியோரும் (சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு) ஓரங்கட்டப்பட்டனர். எனவே சமூகத்தில் பித்அத்கள் தோன்றி, அவை செல்வாக்குடன் திகழ்தன மக்கள் சாதாரணமாக தம்மை அறியாமல் நிராகரிப்பை ஏற்படுத்துகின்ற காரியங்களில் ஈடுபடலானார்கள். அத்துடன் பகுத்தறிவுக்கு முன்னுரிமை வழங்கி, அதனை ஆதாரமாகவும் ஆக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் வல்லமை, அவனது அத்தாட்சிகள், அவனது சட்டதிட்டங்கள், ஏவல் விலக்கல்கள், அனைத்தையும் தமது பகுத்தறிவுடன் ஒப்புநோக்கி, பகுத்தறிவுக்கு எட்டியவைகளை ஏற்றுக்கொள்ளவும், எட்டதவைகளை மறுக்கவும் செய்தனர்.
எனவே அல்குர்ஆனும், சுன்னாவும் ஆதரவற்று அந்நியமானது. மேலும் சுன்னத் வல் ஜமாத்தினரும் இஸ்லாமிய ஆட்சி நடைபெற்ற தம் சொந்த மண்ணிலேயே (மதீனாவில்) அந்நியமானார்கள். அப்பாஸியர்களின் ஆட்சிகாலம் வரை ஜஹ்மியாக்களின் கொள்கைகளுக்கு உலமாக்கள் மறுப்பு கொடுத்து வந்தனர். இவர்களின் ஆட்சி காலத்தில் அறிவில்லாதவர்கள் மார்க்க விஷயங்கள் பற்றியும், பொது (அரசியல்) விஷயங்கள் பற்றியும் பேச ஆரம்பித்ததுடன் பகுத்தறிவுக்கு முன்னுரிமையும் வழங்கலானார்கள். பகுத்தறிவை முன்வைத்து ஹதீஸ்களை மறுத்ததோடு, தமது கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்களை நிராகரிப்பாளராக்கவும் துணிந்தார்கள். இந்நிலையில் இவர்களது கொள்கையில், சிந்திக்கும் ஆற்றல் இல்லாத பாமரர்களும், மார்க்க விஷயங்களில் அலட்சியப் போக்குடையவர்களும் சிக்கி வழிகெட்டுப் போயினர். இதன் விளைவாக தம்மை அறியாமலேயே நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடிய காரியங்களில் மக்கள் ஈடுபடலானார்கள். இவ்வாறு முஸ்லிம் சமுதாயத்தினர் ஒருபுறம் நிராகரிப்புக்குள்ளாயினர். மறுபுறம் கடவுளே இல்லை எனும் நாஸ்திக கொள்கையில் சிக்கினர். மற்றொருபுறம் வழிகேட்டில் வீழ்ந்தனர். இன்னொரு புறம் பல பிரிவினர்களாக பிரிந்து இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத “பித்அத்” எனும் நூதனத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறு இஸ்லாமிய சமுதாயத்தினர் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டனர். எனினும் இத்தகைய நிலைமையிலும் சிலர் சத்தியத்தில் நிலைத்திருக்கவே செய்தனர். இவ்வாறு சத்தியத்தில் நிலைத்திருந்தோர் நபி(ஸல்) அவர்களையும், சஹாபாக்களின் முன் மாதிரிகளையும் பின்பற்றி நடந்தனர். இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அடங்கிய எல்லாத் துறைகளிலும் நபித்தோழர்களை முழுமையாகப் பின்பற்றி நடந்தனர். சஹாபாக்களின் முன் மாதிரிகளைப் புறக்கணிக்கவோ, அவர்களை குறைகூறவோ இல்லை. ஹலால், ஹராம் விஷயங்களில் முழுமையாக சஹாபாக்களைப் பின்பற்றி நடந்தார்கள். சஹாபாக்கள் உலகில் வாழ்ந்தபோது நிறைவான ஈமானுடன் இஸ்லாத்தின் வரம்புகளைப் பேணி வாழ்ந்தார்கள் என்ற நம்பிக்கையே இவர்களை வழிகேட்டிலிருந்து பாதுகாத்தாது.
எனவே தமது மார்க்க விஷயங்களில் நபித்தோழர்களைப் பின்பற்றி நிம்மதியும் சந்தோசமும் அடைந்தனர். ஏனெனில் மார்க்கம் என்பது சஹாபாக்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. (ஷரஹ் ஸுன்னா குறிப்பு எண்: 95,98)
அரபியில்:இமாம் அல் ஹசன் பின் அலி அல்பர்பஹாரி (ரஹிமஹுல்லாஹ்)
ஆக்கம்: அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி,